நீ வரும் நாளுக்காக...

நேற்று நீ...
நமது வீட்டின் முன்னறையில்
கிடத்தப்பட்டிருந்தாய்
உனது கால்களின் பெருவிரல்களும்
கைகளின் பெரு விரல்களும்
இணைத்துக் கட்டப்பட்டபடி

அசைந்தாடிய உனது காலம்...
இறந்த காலமாகிவிட
அசைவற்று ஒரு
தென்னைப் பாயில் கிடக்கும்
உன் நிலையை ஏற்க மறுத்து..
உப்பு அருந்திய நதியென
கண்ணீர் கடந்து செல்கிறது
என் கன்னப் பரப்பை.

வழியும் கண்ணீரினூடே...
மிதந்து கரை தேடித் தவிக்கும்

உன் பனிக்குடத்தினுள்
கால் குறுக்கி நான் அமர்ந்த
நாள் முதலான...
நாம் வாழ்ந்த காலத்தின் பந்தம்.

என்னை மடியில் கிடத்தி
நீ சொன்ன தாலாட்டிற்கு மாற்றாக...
உன்னை என் மடியில் கிடத்திச்
சில மந்திரங்களைச் சொல்லுவேன்...

அவை
இன்று உன்னைக் கடவுளிடம் சேர்த்து...
மீண்டும்
என் கரங்களில் சேர்த்துவிடும்
என்னும் மகத்தான நம்பிக்கையில்.

இந்தக்கணத்தில்-
இனி நான் செய்வதற்கு
எதுவுமில்லை என்றாலும்...

உன் வாயில்
அரிசி போடும் முன்னரும்...
உன்னை எரியூட்டும் முன்னரும்
அனிச்சையாய்..

உன் இதயத் துடிப்பை
மீண்டும் ஒரு முறை சரிபார்த்து
ஏமாற்றத்துடன் திரும்பும்
என் விரல்கள்.

பின்-
நதியில் சாம்பலெனக் கரையும்
உன்னை இமைக்க மறுக்கும்
என் கண்களால் பார்த்தபடி..
தனித்து நீங்குவேன்..
பகிர்வதற்கியலாத
பெரும் துயரத்துடன்.....

என்றாலும்-
நாளை நீ என் கரங்களில்
சேயாகும் போது...
நான் உனக்குச் சொல்லும்
உன்னுடைய கதையை..
நீ ஒரு தேவதையென
இரசித்து மகிழ்வாய்....

என்னும்
பெரும் நம்பிக்கையுடனும்.

எழுதியவர் : rameshalam (8-Aug-12, 3:50 pm)
பார்வை : 164

மேலே