பெயரிடப்படாத கவிதை.

கதைப் புத்தகத்தில்
படம் பார்த்துக் கொண்டிருக்கிறாள்
குழந்தை.
படத்தில் இருந்த மிருகம்...
மெதுவாய் நடந்து சென்று
அவளின் கண்களின் வழியே
உள்ளே நுழைந்து
உட்கார்ந்து கொண்டது.
இரவில்-
தூங்கும் குழந்தையின் கனவில்
வாய் திறக்கும் மிருகத்தை
"அம்மாகிட்டே சொல்லிடுவேன்"
என்று பயமுறுத்தி
உறங்கச் சொல்கிறது குழந்தை.
*************************************************
பள்ளிக்கூடத்தில்...
மாறுவேடப்போட்டி.
குழந்தைக்கு
பாரதியார் வேஷம்.

இவள்-
மூன்று நாட்களாக
பாரதியாருக்கு...
"அச்சமில்லை...அச்சமில்லை..."
சொல்லிக் கொடுத்துக் கொண்டு
இருக்கிறாள்.
************************************************************
சின்னவயதில்....
"அல்லாவுதீனும்...அற்புத விளக்கும்..."
படித்ததிலிருந்து
எந்தப் பழைய பொருளையும்
ஒருமுறை
தேய்த்துப் பார்க்காமல்
கீழே வைப்பதில்லை.

நேற்றுக் கூட-இந்த வயதில்
பழைய சாமான்கள் கடையில்
இருந்த ஒரு
அரதப் பழசான மதுக்குடுவையைத்
தேய்த்துப் பார்த்தேன்.
***********************************************************

எழுதியவர் : rameshalam (13-Aug-12, 12:25 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 179

மேலே