இல்லாமல் இல்லாமலே !

மேகங்கள் இல்லாமல் ஒரு வானமா ?
மேதினம் இல்லாமல் தொழிற்சங்கமா ?
ஊகங்கள் இல்லாமல் ஊடகமா ?
யோக நிலை இல்லாமல் தவம் வருமா ?

நடனங்கள் இல்லாமல் சிதம்பரமா ?
நாடகங்கள் இல்லாமல் தமிழ் மணமா?
படர் கொடிகள் இல்லாமல் பாகல் காய்க்குமா ?
பாதைகள் இல்லாமல் பயணம் கடக்குமா ?

வேர்கள் இல்லாமல் மரங்கள் வாழுமா ?
விதைகள் இல்லாமல் பயிர்கள் வளருமா ?
ஊர்கள் இல்லாமல் நாடுகள் உண்டாமோ ?
உழைப்போர் இல்லாமல் உயர்வுகள் நன்றாமோ?

வாசனை இல்லாமல் பூங்கா வனமா?
வரங்கள் இல்லாமல் தெய்வ மனமா?
காசேதான் இல்லாமல் காசினி இயங்குமா ?
காதலே இல்லாமல் வாழ்வியல் இனிக்குமா ?

கரைகள் இல்லாமல் நதிகள் செல்லுமா ?
கவிதை இல்லாமல் காதல் சொல்லுமா ?
பிறைகள் இல்லாமல் முழுமதி ஆகுமா ?
பிழைகள் இல்லாமல் மழலைதான் பேசுமா ?

அன்புதான் இல்லாமல் அறம் பிறக்குமா ?
ஆன்றோர் இல்லாமல் சபை சிறக்குமா ?
என்புதோல் இல்லாமல் இதயம் துடிக்குமா ?
( இந்த )
"இல்லாமல்" இல்லாமல்(இக்)கவிதை பிடிக்குமா ?

எழுதியவர் : முத்து நாடன் (17-Aug-12, 9:13 pm)
பார்வை : 166

மேலே