7.ஆதலினால் காதலித்தேன்.!-பொள்ளாச்சி அபி.

கலங்கரை விளக்காய் நீ,
வாழ்வின் கரையினைக் காட்டி,
உறவினை நிலைக்க வைத்தாய்,
காதல் உயர்வெனக் காத்து நின்றாய்.
-- எஸ்.ராஜேந்திரன்--

நாளடைவில் ‘சரோ’வின் துணிச்சலான பேச்சும்,நடவடிக்கையும் நட்புக்குரிய தோழி என்ற உரிமையுடன் எங்களுக்குள் மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.எங்கள் இருவருக்கும் பொதுவாக இன்னதுதான் என்றில்லாமல்,தெரிந்த எல்லா விஷயங்களைக் குறித்தும் தெரிந்தவரை விரிவாகப் பேசினோம்.விவாதித்தோம்.அது சரியா தவறா.? என்று தெரியாமல் தீர்மானித்தோம்.
இதில் எங்களின் கடந்தகாலத்தில் பார்த்த சினிமா,படித்த புத்தகங்கள்,பள்ளிப் படிப்பு,வகுப்பு மாணவர்கள்,ஆசிரியர்களின் நடவடிக்கைகள்,என சகலமும் சுவாரஸ்யமாய் வந்து போனது.அதுபோலவே எனதும்,அவளுடையதுமான‘காதல்’அனுபவமும்.

அவளின் வகுப்புத் தோழனாய் இருந்த ஒருவன்,ஹிந்திப் பாடல்களிலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்ட சில வரிகளைக் கோர்த்து, அச்சுப்பிச்சு என்று எழுதப்பட்ட ‘காதல் கடிதம்’ ஒன்றைத் திடீரென அவளிடம் நீட்டியுள்ளான்.

அதைப்பிரித்துப் படித்தவள்,அக்கடிதத்திலிருந்த பாடல் வரிகளில் இருந்த எழுத்துப் பிழைகளையெல்லாம் திருத்தி,சிவப்பு மையால் அடிக்கோடிட்டு,திருப்பிக் கொடுத்திருக்கிறாள்.இனியாவது தப்பில்லாமல் எழுதிப் பழகு..” என்று அந்தப்பேப்பரில் அடிக்குறிப்பாக அறிவுரை வேறு.

அந்தப்பையன் அதோடு வெறுத்தவன்தான்,அந்தப்பள்ளியிலிருந்து வெளியேறும் வரை..அவளிடம் மீண்டும் இன்னொரு கடிதத்தை கொடுக்க முயற்சிக்கவேயில்லையாம்.!.அதைத்தவிர வேறொன்றும் காதல் தொடர்பாக தன்னிடம் சொல்வதற்கு தகவல்கள் எதுவுமில்லை என்றாள் சரோ.

‘ஆகா..ஏதோ சுவாரஸ்யமாக கதை விரியப்போகிறது’என்று நினைத்த எனக்கு சப்பென்று முடிந்துவிட்டது.

ஆனால்,காதல்கடிதம் கொடுத்த பையனிடம் எரிந்துவிழுந்து,ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்காமல்,பெற்றோர் ஆசிரியரிடம் அதனைக் காண்பித்து ரகளையில் ஈடுபடாமல்,அவளுக்கும் அவனுக்கும் இடையே மட்டும் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை,அவள் தீர்த்துக் கொண்ட
வழிமுறை வித்தியாசமாகத்தான் இருந்தது.

இப்படி நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே.. “ அப்புறம் உன்னுடைய அனுபவம் என்ன.?” அவள் என்னிடம் இப்படிக் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.காதல் என்பதில் சொல்லிக் கொள்ளும்படியாக,எனக்கென்ன அனுபவமிருக்கிறது.?, அதிகபட்சமாக காதலிக்கவேண்டும் என்ற ஆசையில்,நான் பள்ளிக்கு சென்றுவரும்போது தாகீரா என்ற பெண்ணைப் பார்த்துக் கொண்டே சென்றதைத் தவிர,அதைச் சொல்லலாமா..வேண்டாமா..,சற்றே எனக்குள் தடுமாற்றம் ஏற்பட்டது. நண்பனிடம் பகிர்ந்து கொள்கிறோம் என்ற நம்பிக்கையில் அவள்தனது அனுபவத்தை சொல்லும்போது,நான் மட்டும் சொல்லாமல் இருந்தால்.., சரோவிடம்,உண்மையை மறைப்பது எனில்,அது பொய் சொல்வதற்கு சமம் என்று ஏனோ தோன்றியது.

நானும் எனது அனுபவத்தைச் சொன்னேன்.அதனால் எனக்கு ஏற்பட்ட பயனையும் சொன்னேன்.
“அதற்குப்பிறகு உனது காதலை தெரிவித்தாயா.? இல்லையா.?”
“இல்லை.., அதைச் சொல்வதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.!”
“ நீ விட்டேத்தியாக சொல்வதைப் பார்த்தால்..அவளிடம் அதைச் சொல்வதற்கு எவ்வித அக்கறையும் நீ காட்டவில்லை என்றே தெரிகிறது..!”
‘அவள் இதைச் சொன்னபோதுதான்,எனக்கும் அப்படித்தானோ..என்று தோன்றியது.இல்லாவிட்டால்,ஒருவருடம் முழுவதும்,முயன்றிருந்தால் சந்தர்ப்பம் கிடைக்காமலா போயிருந்திருக்கும்.?’
“ஆமாம் சரோ..எனக்கும் இப்போது அப்படித்தான் தோன்றுகிறது”
“ஏன்..என்ன காரணம்.?”
உண்மையில் எனக்கு இப்போது பதில் சொல்லத் தெரியவில்லை. “சரி விடு சரோ..அது எப்பவோ முடிந்து போன விஷயம்.இப்போது அதற்கு என்ன.?”
அதற்குப் பிறகு அவள் யார்.? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாள்.? என்றெல்லாம் கேட்டபோது,அதற்கு முழுமையான பதில்களைச் சொல்லவும் எனக்குத் தெரியவில்லை.
சிலவிநாடிகள் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், “சரி,பிறகு பேசுவோம்” என்று கூறி எழுந்து சென்று விட்டாள்.
அதற்குப்பிறகு பல மாதங்களாக,பல சந்தர்ப்பங்களிலும்,இந்த விஷயத்தைக் குறித்து நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.

இப்போதெல்லாம் எனக்கு பட்டறையில் இரவுநேரப் பணியும் கொடுக்கப்பட்டது.மிக நீளமான அளவுள்ள இரும்பு ராடுகளை,கட்டிங் மிஷின் மூலம்,குறிப்பிட்ட நீளமுள்ளவையாக அறுத்துவைப்பது மட்டுமே எனக்கான பணி.மிஷின் அறுத்துக் கொண்டு இருக்கும்போது அதன் பிளேடு சூடாகாமல் இருக்க தண்ணீர் விடுவதும்,அறுத்து முடித்தவுடன் அதனை ஒழுங்காக அடுக்கி வைப்பதுமாகவே அந்த ஷிப்ட் முழுக்க வேலையாக இருக்கும்.
பிளேடுக்கு கையால் எடுத்து தண்ணீர் விடுவது என்பது சற்று அதிகப்படியான வேலையாக எனக்குத் தோன்றியது.இதற்காக நான் ஒரு உபாயம் செய்தேன்.ஒரு உயரமான ஸ்டூலின் மீது டிரம்மை வைத்து அதன் கீழிருந்த டேப்பின் வழியாக ரப்பர் டியூப் ஒன்றை செருகி,அதன் மறுமுனையை பிளேடுக்கு நேராக தண்ணீர் விழும்படி பொருத்திவிட்டேன்.இப்போது,எனது வேலையில் பாதி குறைந்து விட்டது.இரும்பு ராடுகள் அறுபட்டு விழும்வரை நான் சும்மாவேதான் நின்று கொண்டிருந்தேன்.அந்த ஓய்வு எனக்கு நிறைய நேரத்தை மிதப்படுத்தி தந்தது.அந்த நேரத்தை என்ன செய்வது.?.

அடுத்த நாள் இரவுப் பணிக்கு சென்றபோது,ஒரு நோட்டையும் எடுத்துச் சென்றேன்.ஓய்வின்போது,எதையாவது எழுதலாம் என்று நிறையக் கருக்களை மனதில் அசை போட்டுக் கொண்டேன்.அதனை சிறியதும் பெரியதுமான கவிதைகளாக,நோட்டில் பதிவும் செய்தேன்.அழுக்கும்,எண்ணைப் பிசுக்கும்,மையின் நீலமும்,எழுதாத இடத்தின் வெள்ளையுமாக,அந்த நோட்டே ஒரு சிறிய வானவில் போல எனக்கு மிகவும் ரசிக்கத்தக்க வண்ணம் காட்டியது.வாரம் ஒருமுறை அதனை வீட்டிற்கு எடுத்து வந்து,அதில் எழுதப்பட்டவற்றை விரித்தோ,சுருக்கியோ,திருத்தி மற்றொரு நோட்டில் எழுதி வைக்கவும் தவறவில்லை.இவ்வாறு நான் எழுதி வைத்ததெல்லாம் சினிமாப் பாடல் மெட்டுகளிலும்,அல்லாதவை கவிதையாகவும் இருந்தன.

காதல் என்பதை மையப்படுத்தி தொடக்க நாட்களில் எழுதத் துவங்கிய நான்,அதன் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக,ஒரு கட்டத்தில் மிகவும் துயரத்திற்குள்ளானேன்.நானும் கவிதைகளை எழுதுவேன் என்று இந்த சமூகத்தில் வெளிப்படுத்திக் கொள்ள ஆசையிருந்தாலும்,மிக நெருக்கமான ஒரு சில நண்பர்களைத் தவிர,இக்கவிதைகளை தாய் தந்தையிடம் கூட காட்டமுடியாத சோகம் என்னை மிகவும் மன நெருக்கடிக்குள்ளாக்கியது. இவற்றை நான் அவர்களிடம் காட்டாதபோதும்,வீட்டிற்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் இக்கவிதைகளை தன் மகன் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறானே.,என்னவாக இருக்கும்.? என்று ஒரு தாய்க்கே உரிய உரிமையில்,எடுத்து வாசித்துவிட்டால்..,என்னைப்ப பற்றி என்னநினைத்துக் கொள்வார் அவர்..?

வயது வந்த பிள்ளை இவ்வாறு எழுதுவது மிகச்சாதாரண விஷயமாக இருக்கலாம் என்று அவர்,ஒருவேளை சுலபமாக எடுத்துக் கொண்டிருக்கக் கூடும்.ஆனால்,எனது மனம் ஒப்பவில்லை.இது வயதுக்கு மீறிய விஷயம் என்று தாயும்,தந்தையும் நினைப்பார்கள் என்றே நம்பினேன்.

‘இவ்வாறு நானே எழுதிப் பொத்திவைத்துக் கொள்வதெனில்..அதனால் எந்தப்பயனும் இல்லாத நிலையில்,அவ்வாறானவற்றை எழுதாமலேயே இருந்துவிட்டால் என்ன..?’

அந்த எண்ணம் வந்தவுடன்,அதுவரை நான் எழுதிய காதல் கவிதைகளை பத்திரப்படுத்தும் போக்கு,என்னை விட்டு மெதுவாய் நீங்கத் தொடங்கியது.அவ்வாறான கவிதைகள் எழுதவேண்டும் என்ற அவசியம் எப்போது வந்தாலும்,அப்போதைக்கு எழுதிக் கொள்ள முடியும்.அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். இனி எழுதுவதை தாய்,தந்தை,சகோதரி,இன்னும்,இன்னும் யார் படிக்கக் கேட்டாலும்,தைரியமாய் கொடுக்கும் வகையில் படைப்புகள் இருக்க வேண்டும் என்று எனக்குள் ஏற்பட்ட தீர்மானம் இறுகிக்கொண்டே வந்தது.

பெண்கள் மற்றும் பெண்கள் குறித்த விஷயங்களை,எதிர்பால் என்ற எவ்வித கவர்ச்சியையும் முன்னிறுத்தி எழுதவேண்டியதில்லை. இனி எனது கவிதையில் பெண்கள் பாடுபொருளாக இருப்பதெனில் அது அவர்களுக்கான குரலாக,அவர்களின் குரலாகவே இருக்கவேண்டும்.இதற்குப் பிறகு எனது கவனம் திசை மாறியது.பெண்கள் எனில் அவர்களுக்கான,தனிமனித,ஆண்களோடு இணைந்த,சமூகம் சார்ந்த பிரச்சினைகள் என கவனிக்கத் துவங்கினேன்.

இதுகுறித்து என்னைவிட,வாழ்க்கை அனுபவம் முதிர்ந்த பெண்களிடம் நான் பேசிப் பழகுவதற்கு முடியாது,என் தாயைத் தவிர..,அப்புறம் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை,எனது தோழி சரோ.,

அப்போதுதான் சில பெண் எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை,வெகுநாட்களாக கிடைக்கும்போதெல்லாம் ஆர்வமாகப் படித்துவருவதை எனது தாயார் வழக்கமாகக் கொண்டிருப்பதும் எனக்கு உரைத்தது.

வீட்டில் ஓய்வாக இருக்கும்போது நானும் அவற்றைப் படிக்கத்துவங்கினேன்.இந்த நாவல்களைப் படிக்கும்போது எனது தாயார் அதனைக் கவனித்தாலும்,அது குறித்து ஒன்றும் சொல்லவில்லை.அப்படியெனில்,அதில் நான் கற்றுக் கொள்ள எதுவாயினும் இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்திருக்கலாம் என்று நானும் புரிந்து கொண்டேன்.

படித்தேன்..நிறைய நாவல்கள் படித்தேன்.அதிலேயே கரைந்தேன்.அந்த நாவல்களின் வாசிப்பில் கண்டுகொண்ட சுகம்..அதற்குப்பின்
இவர்களில் யாரேனும் எழுதிய புதிய நாவல்கள் விற்பனைக்கு வந்தால்,நானே எனது தாயாருக்கு வாங்கிக் கொடுப்பதில் முடிந்தது.
இவ்வாறு சமூகத்தின் மற்ற சில பரிமாணங்களை தங்கள் கதைகளின் மூலம்,ஒரு ஆசானைப் போல இருந்து எனக்கு இந்த எழுத்தாளர்கள் புரிய வைத்தார்கள்.

ஆதலினால் காதலித்தேன்.! .இப்போதும் காதலிக்கிறேன்..! அவர்கள் பெயர் லக்ஷ்மி எனும் டாக்டர்.திரிபுரசுந்தரி, அனுராதா ரமணன், ஜோதிர்லதா கிரிஜா, வாசந்தி, சிவசங்கரி.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி.B +ve (24-Aug-12, 8:16 pm)
பார்வை : 309

மேலே