கால்வாய் இளவரசன்..
கேளிக்கை நிறைந்த உலகின்
வேடிக்கை மனிதர்களோடு
என் வலியோ விதியே என
அச்சாலையோராம் அயர்ந்து நடந்திருந்தேன்..!
நெருடிய போக்குவரத்தின்
ஒற்றையடி வெற்றிடத்தில்
கருப்புச் சாயம் பூசிய கழிவுக் கால்வாய் அங்கே..!
அந்திக் கால இலைச் சரகாய்
வெற்றுக் காய்ந்திட்ட தலை முடியாம்,
வெயில் தொட ஏங்கி மேனி
தென்பட்டு கிளிர்ந்திருக்கும் மேலாடையாம்,
வாடிய வறுமையில் கூட
நெடுந்துச் செழித்து வளர்ந்திருக்கும்
கறைப் பட்ட நகங்களாம்,
ஆம்..! போர்த்திய சேலை தான் குறிப்பிட்டது
அவள் பெண் என்று..!
கால்வாய் கழுவிய கைகளோடு
காதில் விழுந்த கணவனின் அழைப்புக்குக்
காலம் கடத்தாமல் சாலைக் கடக்க
அங்குமிங்கும் பார்த்து பதறியடித்து ஓடினாள்.!
நடைப் பாதை இடையிலே,
அரைகுறை உடையிலே
அசந்து உருளும் அந்தக்
குடிகார துணைவனோ
"அடியேய் இந்தச் சனியன் கத்திட்டே கிடக்குது பாரு..ஏய்..''
என உமிழ் வடிந்த உதட்டோடு உரைத்து விட்டு
மறுபடியும் உலகம் மறந்து துவண்டான்..
கூப்பி வைத்திருந்தக் குப்பைக் கழிவின் மீது
நியாய விலைக் கடைச் சேலை மரத்தொட்டிலாடிய
அக் 'குட்டிக் கால்வாய் இளவரசனை'
சேலையில் துடைத்த அழுக்குக் கரங்களோடு
கட்டியணைத்துத் தூக்கினாள்..
தான் பாடும் தால் வார்த்தைகள்
சாத்தியமோ என அவள் எண்ணவில்லை
எனில் அவள் வடித்த வாக்கியங்களெல்லாம்
"என் ராசா..அம்மா வன்டேன் பாருயா..
என் மகாராசன்.."...
அனைத்தும் அமைந்திருக்கும்
அன்பான வாழ்க்கையிருந்தும்
அமைதி இழந்திட்டேன் என்று
புலம்பிய என் உதடுகளைத்
தொட்டுத் தட்டிக் கொடுத்தது
என் கண்ணீர்த் துளிகள்..!
நான் ஆசிர்வதிக்கப் பட்டவன் என..!!
-ராம் K V