அடுத்த பாடத்துக்கான ஏடு தொடக்கல்

சாவுகளின் வலியோடு
கடந்து வந்த பாதைகளை
சொல்லி சொல்லி துயரின் மேல் சாய்ந்திருக்கிறாய். . .

எங்கள் வீடுகளிலும்
பள்ளிக்கூடங்களிலும்
தேசச் சிந்தனை படிந்திருக்கும்
பெரும் விருட்சங்களின் வேர்களைத் தாண்டி
எப்படி
வென்றுவிடும்
இரண்டு இஞ்சி எழும்பி
நிற்கும்
பகைப் புல்லு !

அடுத்த
நடத்தலுக்கான
ஒரு இடைவெளியில்
பெருகித் திரியும்
துரோக நாய்களுக்கு
விஷ ஊசி போடுவதே
அடுத்த
பாடத்துக்கான ஏடு தொடக்கல்!

எங்கள் பட்டினியின் விளைவில்
தென்படும் மகிழ்ச்சியை
மிருகப் பசியோடு அபகரித்த
கயவரின் கால்களை
முறிக்க மறந்து வாழ்வு நடத்தும்
மானமில்லாத
வெறும் பேசும் பூதவுடல்களுக்கு
எங்கு போய்
பாவம் தீர்க்கும் இந்த வீர மண் . . .!

தருவதெற்கென்று ஆக்கப்பட்ட உயிர்கள்
தரும்போது பெரும் பசியாறுகிறது.
மரண பயத்தில்
வாழ்வு நடத்தும் இவ்வுலகத்தில்
மரணத்தை மண்ணுக்காய் பரிசளிப்பதென்பது . . .!

தேசத்தின் வடுக்களோடு
இடப்பெயர்வை மணம் முடித்து
தேசச் சிந்தனையில்
எறிகணைக்கு ஒரு தாவாரம் ஒதுங்கி
பயத்துடனே
வாழ் நாள் முழுதும் வலியுடன் வாழும்
இந்த மக்களை
எப்படி பாடுவது கவிதையில் ?

அவர்கள் உடுபுடவையிலும்
வீடு கட்டி
இருந்தனராம்,
கடற்கரை மரத்தோடு . . .

தோழா!
பகைக்கு நன்கு தெரிந்த
உன் பாய்ச்சலை
உன் நகங்களை
உன் உறுமலை
உன் தோல்வியென உலகறிவித்த
நிலத்தினிலிருந்து நகர்த்து
அது தான் உன்
இன மானம் காக்கும் !

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (2-Sep-12, 4:06 pm)
பார்வை : 224

மேலே