மீண்டும் சந்திக்கிறேன்.....
மீண்டும் சந்திக்கிறேன் உன்னை
வெகு காலத்திற்குப் பிறகு.
மனவிளிம்பில் நிற்கும் வார்த்தைகள்
ஏனோ...விழுந்து விடுகின்றன
அதன் அடிவாரங்களில்...
உனது மன்னிப்பைக் கோரியபடி.
எனது பார்வைகள்...
இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன
உன் மேல் நிலைக்காமல்.
நினைவுகள் மட்டும் சென்று....
திரும்புகின்றன
பழைய பாதையில்....
ஒரு பழகிய வண்டி மாடாய்.
நாம் திரிந்த வானம்...
நம்முடையதாய்க் களித்த நிலம்...
எல்லாமே சிதைக்கப் பட்டிருந்தது...
உருத்தெரியாமல் பிய்த்தெறியப்பட்ட
காலத்தைப் போல.
கௌரவக் கொம்புகள்
கூர்மையாய் சீவப்பட்ட களத்தில்
பலி ஆடுகளாய் நாம்.
பலிபீடங்களில் நமது தலைகள் வைக்கப்பட்டுவிட்ட பிறகு....
யார் யாரோ...
நம்மை உண்டுப்
பசியாறினார்கள்.
பூக்களென....
நாம் நடந்துவர
வழியெங்கும் உதிர்ந்திருந்த
காலம்..
முள் படுக்கையில்
நம்மைக் கிடத்திவிட்டு
கடவுளை...நம்மிடம்
மன்னிப்புக் கேட்கச் சொல்லி
கட்டளை இட்டுக் கொண்டிருக்கிறது
இப்போது.
கசந்த துயரங்களில்...
அகிம்சையின்
அடிவயிற்றிலிருந்து
வெகுண்டெழுந்த தீவிரவாதமாய்
அலைக்கழிக்கப் படுகிறேன் நான்...
உயிர்ச்சுமை சுமந்திருக்கும் கணங்களில்.
உயிர் உருவும்
கண்கள் அறியாத் தாக்குதல்களால்...
மனம் இரணமாகி...
மரணம் தழுவிய உன் பாதையில்...
நான் தூவிய கண்ணீர்ப் பூக்கள்
சாம்பலாகி...
இன்று...
நான் பழி வளர்க்கும் செடியில்
வாசனை ஆகி இருக்கிறது.
நிம்மதியின் சுவாசம்
இறுதியாய்...
என்னைத் தழுவ...
மதுரையை எரித்த
கண்ணகியின்
கடைசிச் சிரிப்போடு...
நழுவுகிறேன்
உன்னை நோக்கி.
உன்னைச் சந்திக்கிறேன்...
மீண்டும்
வெகு நாட்களுக்குப் பிறகு...
உன் உடன் வராத
உறுத்தல்களோடும் ....
பெரும் தயக்கத்துடனும்.