அடே பாரதீ
பைந்தமிழைப்
பொத்தல் ஆடைக்குள்
பொத்தி வளர்த்தவனே!
இன்று பாரடா!
தங்கள் பொன்னாடைகளுக்காய்க்
கலைவாணியின்
புடவையை உருவுகிறவன் எல்லாம்
புரட்சிக் கவிஞனென்று
புன்னகை புரிவதை.....
பணத்திற்காய்
அந்தக்
கலைவாணியைக் கூடக்
கூட்டிக் கொடுக்கத் தயங்காத
மாமா பயல்களெல்லாம்
மகாகவிஎன்று
மார்தட்டிக் கொள்வதை....
பாரடா பார்!
கூரைக்குத் தீவைத்துவிட்டு
குடிசைக்குத் தீபமேற்றியதாய்
விளம்பரப் படுத்திக்கொள்ளும்
வேசி மகன்களான
போலி அரசியல் வாதிகளைப் போல்
கலைவாணியின் முகத்தில்
கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிட்டு
காலத்தை வெல்லும்
காவியங்கள் படைத்துவிட்டதாய்
இவர்கள்
கூச்சமின்றி
கூறிக் கொள்வதை
இனியும் எப்படி
கண்டு கொள்ளாமல் இருப்பது?
கன்னித் தமிழ் நதியின்
கரைகள் என்று சொல்லிச் சொல்லியே
சில
ஓநாய்கள் குடித்துக் கொண்டிருப்பதை
ஒருக்காலும் பொறுக்க முடியாது....
எம் தமிழேட்டில்
எழுத்துப் பிழைகளாய்
அவதரித்தவர்கள் எல்லாம்
எழுதுகோல் ஏந்துவதை
என்னால்
ஏற்க முடியாது...
இங்கு
இலக்கியம் அரசியல்
இரண்டுக்கும்
இம்மியும் வித்தியாசம் இல்லை!
இரண்டிலும்
ஊழல் செய்பவனுக்குத் தான்
உலக மரியாதை...
அன்று
அரசர்களின்
அந்தப்புரங்கள் என்னும்
அசோக வனத்தில்
அடைபட்டுக் கிடந்த தமிழ்ச் சீதையை
நீ மீட்டெடுத்தாய்.
இன்று
அதே சீதை
சில
துர்வாசக் கவிஞர்கள் என்னும்
துச்சாதனர்களுக்கு மத்தியில்
திரௌபதயாய் நின்று
தவித்துக் கொண்டிருக்கிறாள்
மீண்டும் அவளை
மீட்க வேண்டாமோ?
இதோ
என் பேனாவைத்
தூக்கி நிறுத்துகிறேன்!
இனிஎன் பேனா
தமிழ்த் தேசத்தின்
கொடிமரம்....
கயவர்களுக்குக்
கழுமரம்....
அடேய்!
உன்
சடலத்தில் பற்றவைத்த தீ
அணைந்து போனதாக
அகிலம் சொல்கிறது.
இல்லை.....இல்லை.....
இதோ!
என்
வயிற்றிலும் நெஞ்சிலும்
பரபரவென்று
பற்றி எரிவதைப் பார்.....
ஓ!
இவர்களுக்குத் தான்
இன்னும் விளங்கவில்லை
அடே பாரதி !
உனக்குமா புரியவில்லை?
என் கையில்
கர்வமாய் நின்று
கர்ஜிப்பது
எழுதுகோல் அல்ல
உன் மீசைஎன்று.....
அடே பாரதி!
உனக்குமா புரியவில்லை?
--------------ரௌத்திரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
