பூச்சிகள் பேசுகின்றன.
ஒவ்வொரு பூவிலும் அமர்ந்து...
தன சிறகுகளை விரித்தபடி...
"என்னுடைய நிறம் என்ன?"
என்று வினவி..பதில் தேடி
பறந்து போகிறது...
இந்தப் பட்டாம்பூச்சி.
************************************************
ஆயிரம் கால்களோடு
நகர்கிறேன்...
ஆர்ப்பரிக்காமல்....
யாரையும் நசுக்காமல்.
ஒற்றைக் காலால்...
ஓர் ஈர்க்குச்சியால்
நசுக்கிவிடுகிறீர்கள் என்னை
எந்தக் குற்ற உணர்வுமின்றி.
*************************************************
என்னைப் பார்த்துப் பயப்படுவதாய்ச்
சொல்லித் திரிகிறீர்கள்.
உங்களின் அலறலில் பயந்து...
மல்லாக்க வீழ்ந்து
அவதிப் படுகிறேன்...
புரண்டு பறக்க இயலாமல்.
*************************************************
சகுனம் சொல்பவன் என்று
என்னைச் சொல்கிறீர்கள்.
எனக்கான சகுனம் தெரியாமல்...
நீங்கள் வைத்திருக்கும்
விஷங்களில்
வீழ்ந்து சாகிறேன்.
***************************************************