தனிமை.

தூக்கம் வரவில்லை
தூரத்திலிருந்து எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது, தனிமை.

நடுஜாமத்து நாய்களின் கண்களில்,
நகர்ந்திடும் நிலவில்,
நீண்ட நெடுஞ்சாலையின் பாய்களில்,
பேய்பிடித்து ஆட்டிவிடும் இந்த தனிமை.

மெளனமான சத்தம் காதுகளைக் கிழித்திடுமே!
வெறுமையான நெஞ்சம் அமைதியை உடைத்திடுமே!
தனிமையான படுக்கை உடலினை எரித்திடுமே!

தனிமையை விரும்பி
தனிமையில் வந்த தனிமையை,
உடைக்க முயலும்பொழுது,
தனிமையில் வந்த தனிமை உடைந்து
தனித்தனியாய் தனிமையாய் உருவெடுத்துச்
சூழ்ந்துவிடுமே!

கலகலப்பான நினைவெல்லாம்
சலசலப்பாய் போய்விடுமே!

சிரித்துப் பேசிய மொழிகளெல்லாம்
இதயத்தை உரித்து உப்பைத் தடவிடுமே!

கலைந்து போன தூக்கத்தில்
தொலைந்து போன அமைதியைத்
தலையணைக்கு அடியில் தலை வைத்துத் தேடினேன்.

அட்டையை போல் ஒட்டிக் கொண்ட
தனிமையை விரட்ட புகைபிடிக்க ஓடினேன்.

கொட்டை எழுத்தில் எழுதியிருந்த 'டாஸ்மாக்' கடைகளை நாடினேன்.
விலைமாதுகளின் மார்பகத்தைப் பாடினேன்.
அவள் இறுக்கி அணைத்து காதுபக்கத்தில்
விட்ட மூச்சுக்காற்றில் வாடினேன்.

புகைத்தேன்; நகைத்தேன்;
குடித்தேன்; அடித்தேன்;
படுத்தேன்; தனிமை தீரவில்லை.

பின்பக்கத்திலிருந்து என்னைத் தழுவிக் கொண்டிருக்கும்
தனிமையைக் கழுவிவிட வேண்டுமென்று
கவிதை எழுதும் போதெல்லாம்,
என் பேனாவையும் சூழ்ந்து விடும் இந்த தனிமை

தனிமையில் இருந்து, தனிமையில் அலைந்து,
தனிமையில் தொலைந்து, தனிமையில் உறைந்து,
துணையாய் இருந்த தனிமையைக் கொன்று
தனிமையிடம் தோற்றுவிட்டேன்.

எழுதியவர் : சரவண குமார் (8-Sep-12, 9:28 pm)
சேர்த்தது : SARAVANA KUMAR
பார்வை : 173

மேலே