பகை அசுரர்களின் மூன்று கோட்டைகள் (பகுதி 1)
திருப்பூவணம் பதிகம் 1 க்கு பொருளுரை தரும்பொழுது, ’விரவலர் அரணம் மூன்று எய்த நாதனை’ என்பதற்கு நான் அளித்திருந்த விளக்கத்தைப் படித்த பரிதி.முத்துராசன் அவர்கள், ’துன்பம் தரும் பகை அசுரர்களின் மூன்று கோட்டைகளையும்.. இவை யாவை என்றுரைத்தால் மிக நன்றாக இருக்கும்’ என்று கேட்டிருந்தார். இதற்கு நான் “முதலில் பகை அசுரர்கள் யார் என்பதை நாம் அறிய வேண்டும். மூன்று கோட்டைகள் என்பது அரண்மனைக்கு உள்ள மூன்றடுக்கு மதில்களே.
தனித்தனிக் கோட்டைகள் அல்ல” என்றும் பதில் அளித்திருந்தேன்.
ஆனால் இன்று அதற்கு ’வைரமணி-லக்ஷ்மி பிளாக் ஸ்பாட்’ என்ற பகுதியிலிருந்து சிறிது விளக்கம் கிடைத்தது.
தாருகன் என்ற அசுரனுக்கு மூன்று புதல்வர்கள் உண்டு. வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர். இவர்கள் பிரம்ம தேவனை நோக்கி தவம் புரிந்து ’நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்’ என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள். வரம் பெற்ற பின் இந்திரன் முதலான தேவர்களை துன்புறுத்தினார்கள்.
இம்மூவரையும் யாராலும் வெல்ல முடியவில்லை. மேலும் அவர்கள் சிவ பக்தர்களாகவும் திகழ்ந்ததால், அவர்களை சிவபெருமான் மட்டுமே அழிக்க முடியும் என்று கருதிய தேவர்கள், பிரம்மனுடனும், திருமாலுடனும் சென்று சிவபெருமானை வேண்டினர்.
உடனே இறைவனின் ஆணைப்படி தேவதச்சன் விஸ்வகர்மா, ரதம் ஒன்றை தயாரிக்க, வில் அம்பு சகிதமாக (மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்ததாம்) நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, பிரம்மா சாரதியாக இயக்க அசுரர்களின் மூன்று கோட்டைகளை அழிக்க சிவபெருமான் புறப்பட்டார்.
'தேவர்களையும் காக்க வேண்டும், சிறந்த சிவ பக்தர்களாகிய அந்த அசுரர்களையும் வதம் செய்யக் கூடாது’ என்று கருணை கொண்ட இறைவன், வில்லை வளைக்காமல், நாணைப் பூட்டாமல் அண்ட சராசரங்கள் நடுங்கும் வண்ணம் ஒரு புன்னகை செய்தார். அப்போது தோன்றிய அக்னியினால் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாயின.
தன்னைப் பூஜித்து வந்த அந்த மூவரில் இருவரை தன் வாயில் காப்போராகவும், ஒருவரை குடமுழா முழுக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டார் அந்த திரிபுராந்தக மூர்த்தி என்றும் சொல்லப்படுகிறது.
தத்துவம்: திரிபுரத்தை எரியுண்ணுமாறு செய்ததற்கு, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களைத் தன் திருவருள் நோக்கால் சுட்டு எரித்தான் என்று பொருள்.
'காஞ்சி மகாத்மியம்' என்னும் நூலில் தாரகன் புதல்வர்கள் மூவரும் கடுந்தவஞ் செய்து, நினைக்கும் இடங்களில் பறந்து செல்லும் ஆற்றல் வாய்ந்த பொன், வெள்ளி, இரும்பு என்னும் உலோகங்களினாலான மூன்று தனித்தனி கோட்டைகளைப் பெற்று அதில் வாழ்ந்து வந்தனர். இவ்வசுரர்களின் ஆற்றலைக் கண்டு அச்சம் கொண்ட தேவர்கள் திருமாலிடம் சென்று அசுரர்களை அழிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர்.
திருமால் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அபிசார யாகம் செய்து கணக்கற்ற பூதங்களையுண்டாக்கி அவற்றை ஏவி மூன்று கோட்டைகளை அழித்து வரும்படி கட்டளையிட்டார். சென்ற பூதங்கள் கோட்டைகளை அழிக்க முடியாமல் புறங்காட்டி ஓடின.
பின்னர், திருமால் அவ்வசுரர்களை சூழ்ச்சியினால் வெல்லக் கருதித் தமது உடம்பினின்றும் ஒருவரை உண்டாக்கி அவரைப் பார்த்து, ‘நீ புத்தனென்று அழைக்கப்படுவாய். நீ அந்த அசுரர்களிடம் சென்று கணபங்கம் என்னும் நூலைப் போதித்து அவரைச் சிவ நெறியினின்றும் பிறழச் செய்வாய். உன்னுடன் நாரதரையும் அழைத்துச் செல்வாய்’ என்று கட்டளையிட்டார். அவரும் அக் கட்டளையை ஏற்று நாரதரையும் உடன் கூட்டிச் சென்று அவ்வசுரர்களுக்கு கணபங்கத்தைப் போதித்தார். (அவர்களைப் பௌத்த சமண மதங்களை மேற்கொள்ளச் செய்தார் என்பது பொருள்)
பின்னர், தேவர்கள் சிவபெருமானிடம் சென்று அவ்வசுரர்கள் சிவநெறியைக் கைவிட்டனர் என்று கூற, சிவபெருமான் அவ்வசுரர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தார் என்றும் காஞ்சிமகாத்மியம் என்னும் நூலில் சொல்லப்படுகிறது.
எனவே, நீண்டு மேலோங்கி எரிகின்ற தீயையும் திருமாலையும் அம்பாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கட்டி, மேருமலையை வில்லாக வளைத்து, ஒரே அம்பைக் கொண்டு இறைவன் சிவபெருமான் தாரகாசுரனின் புதல்வர்களான வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற அசுரர்களின் ஆகாய மார்க்கத்தில் உள்ள மூன்று கோட்டைகளையும் எரித்தார் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகங்களில் கூறுகிறார் என்பது தெளிவு.

