மீண்ட சொர்க்கம்!
விளையாடி களைத்திருந்தேன்..
விழி மூடக் காத்திருந்தேன்..!
நான் தான் உன் வாழ்க்கை என்று
என் எதிரில் நின்றாய்..!
எதிர்ப்பதற்கு துணிவில்லை..!
உன்னை மணக்க மறுப்பதற்கும்
மனம் துணியவில்லை..!
காலமெல்லாம் கரைசேர்ப்பாய் என்றே
உன்னை கரம்பற்றினேன்..!
கணநேரமும் உன்னைப்பிரிய மனமின்றி
கட்டுண்டு கிடந்தேன்..!
அதை காதல் என்று நான் நினைக்க..,
காதலைத்தொடாமல் காலம் கடத்தினாய்..!
நிழல் தொடாத நிஜம் என் வாழ்க்கை..!
உயிர் இல்லாத சுவாசம் என் உறவு.!
கவிதையாய் வடித்துவைத்த
என் வாழ்க்கை கனவுகள்..
கானலாய் காற்றில் கலக்க..!
என் உயிர் பிரித்தேன்..!
அதை உலகாய் மாற்றினேன்..!
எனை ஆளும் அரசியும்,
என் ராஜ்ஜியத்தின் ராணியும்,
என் வாழ்க்கையை ஆளவே..!
மறந்தே போனேன்..
உன்னை மணக்க மறுத்த என் மனதை..!
உன்னால் வடியும் கண்ணீர்த்துளிகள்
உன்னை மன்னிக்க மறுத்தாலும்,
என் மார்பில் வடிந்த தாய்ப்பால்..
ஏனோ உன்னை மறந்து மன்னித்தது..!
அவளின் சிரிப்பினில் சற்றே சிறைவைத்தேன்..
என் துயரங்களை..!
விதி எதுவும் செய்துவிடவில்லை..!
விதியை விட நீ செய்வாய் என்றும்
நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை..!
உன் உறவோடு பிரிந்திருந்தேன்..
இரவோடு தனித்திருந்தேன்..
விடியாமல் துடித்திருந்தேன்..!
என் கண்ணோடு கவிபேசும் சொர்க்கத்தை
தவிக்கவிட்டேன்..
உன் அமில வார்த்தைகளில்
என் வாழ்க்கையையே உருக்குலைத்தாய்..!
இருந்தும் பொறுத்திருந்தேன்..!
நீயோ அதன் பூட்டவிழ்த்தாய்..!
வார்த்தைகளின் வலியுணரச்செய்தாய்..!
என் உறவினில் பிரிவினை மணம்செய்துவைத்தாய்..!
என் வாழ்க்கையை உன் கரங்களில்
தத்துகொடுத்த நாளினை
தத்தெடுத்தாய்..!
கண்களின் ஓரம்
சற்றே எட்டிப்பார்க்கும் கண்ணீர்த்துளிகளுக்கும்
தெரியவில்லை..!
கண்ட நேரத்தில் எட்டிப்பார்த்து வேதனைப்பட வைக்கிறது..!
உன்னை பிரிவதில் எனக்கொன்றும் பெரிதாய் வலியில்லை..!
வெறுமையாக்கிய என் வாழ்க்கையை விட
வேறு என்ன செய்து விடப்போகிறாய்..?
பரவாயில்லை போ..!
வாழ்ந்து கொள்கிறேன்..!
என் வாழ்க்கையோடு..!
என் குழந்தைகளின் வாழ்க்கையை
உடையாமல் பார்த்திருப்பேன்..!
என் இழந்த சொர்க்கத்தை மீட்டெடுப்பேன்..!
அதை என் உயிரோடு சேர்த்துவைப்பேன்..!
உன் சுவடுகளைக்கூட
அதில் பதிய விடமாட்டேன்..!
மரத்துப்போன என் மனதிற்கு,
மணவாழ்க்கை ஒரு மருந்தல்ல..!
மகள் வாழ்க்கையே மருந்து..!
(கணவனைப் பிரிந்து வாழும் மனைவி, தன மகளுக்கு தரும் திருமண நாள் பரிசு! இக்கவிதை! )