நான் ஒரு முதிர்க் கன்னி !

காலம் புரண்டோடுகிறது
கறைப் படிந்த வாழ்கையின்
கறைகளைக் கழுவாமல்,
இமைக் கரைகளை
எந்நாளும் கழுவிக் கொண்டு !

கண்ணீர்த் துளிகளின் விலாசம்
இமைகளின் வேர்கள் மட்டுமே அறிந்திருக்க,
புறங் கையின் ஒத்தடத்தின் பின்
இதழ்களில் எந்நாளும்
புன்னகையின் பிரசவம் ஊருக்காய் !

கண்ணாடி முன் கறுப்புப் பொட்டும்
கனவில் மட்டும் - குழந்தையின்
கண் திஷ்டிப் பொட்டும் - தினந்தோறும்
தீக்கிரையாக்கிப் போகிறது
தீண்டப்படாத என் மேனியை !

மாதம் ஒருமுறை விளக்கும்
தேநீர்ப் பாத்திரங்கள்
மங்கையிவள்
வாழ்க்கைத் தீரும் வரை
விளக்குவதற்காய் காத்திருக்குமோ ?

முற்றத்தைக் கடந்துப் போகும்
பூக்காரியின் கூவல்
வளாகமெங்கும் கேட்கும் – அப்போது
வீட்டறைக்குள் அலறும் அபலையின் குரல்
ஆண்டவனுக்கும் கேட்காதோ !

எந்நாளும் - சந்தனமும் குங்குமமும்
ஏற்றுக்கொள்ளும் சாமிக்கு
வேண்டுதல்கள் கேட்கவில்லையா,
குங்குமத்தின் முத்தமொன்று
கொடுப்பதற்கு மனமில்லையா ?

கண்ணாடி முன் நின்றால்,
கண்ணுக்குத் தெரியும் நரைகளைக்
கத்தரித்த கத்தரிக்கோல்
களைத்துப் போகும் நாள் வந்தால்
கதறி அழும் கண்ணிருந்தால் !

சீரழியும் வாழ்க்கைக்கு
சீதனமே சாபமோ ?
சிங்காரம் இல்லாமல்
சீதனமும் இல்லாமல் பிறந்தது
இவள் செய்த பாவமோ?

எழுதியவர் : கே.எஸ்.கலை (11-Sep-12, 7:40 pm)
பார்வை : 221

மேலே