இரவில் ஒரு இரவு..

அந்த இரவின் போர்வையில்

இயங்கும் பேருந்தின் இருக்கையில்

இறுகும் இரு கரங்கள்.

--------------------------------------------------

புரிதலா இது சரிதலா என்று தெரியாமலே

இயங்குகிறது பேருந்தும்,

தன் பயணத்தின் இறுதியை நோக்கி.

--------------------------------------------------

எனக்கு உறக்கமில்லை,

அவர்களுக்கு இரக்கமில்லை.

மார்கழிப் பொழுதின் தீயுறையும் குளிரில்

அவர்களின் இறுக்கம்

கால்களை குறுக்கவைக்கிறது.

--------------------------------------------------

கட்டிப்போட்ட கண்கள் இரண்டையும்

கட்டியணைத்திருக்கும் கரங்கள்,

கைபிடித்து இழுத்துச்செல்கின்றன.

--------------------------------------------------

எனக்குள் ஒரு மிருகம் இருப்பதை

அன்றே உணர்ந்திருந்தேன்.

உணவிட மறந்ததைமட்டும்

இன்றுதான் உணர்கிறேன்.

உணவிடபட்ட மிருகங்களும்

எச்சில் நனைத்தே காத்திருக்கின்றன.

--------------------------------------------------

காதலில் தோற்று பல வருடங்கள்.

இன்றுதான்

கண்மூடித் திட்டிகொண்டிருக்கிறேன்

காதலியை.

நாங்கள் பல பயணங்களை

முடிக்க மறந்துவிட்டோம்.

--------------------------------------------------

காதல்.

காதலர்களுக்கு எப்படியோ,

மற்றவர்களுக்கு நிச்சயமது

ஒவ்வொரு நிமிடங்களின் சாதல்

இன்னுமே இயக்கத்தில் பேருந்து.

எழுதியவர் : வைகை ரூபன் (11-Sep-12, 11:46 pm)
சேர்த்தது : vaikai rooban
பார்வை : 252

மேலே