வற்றிய கிணறு - காதலாரா
வற்றிய கிணறு - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~
அந்த வற்றிய கிணறை
பார்க்கும் பொழுதெல்லாம்
ஆறாக அழுகை விழுகிறது
ஆறாத பெருந்துயர் விரிகிறது
வஞ்சத்தின் முகம் சிரிக்கிறது
நெஞ்சத்தின் கனம் உடைகிறது
சோகம் சுமக்கும் தாகம்
கல் இடுக்கில் வளர்கிறது
வாய் பொத்தி விழும் கண்ணீர்
கன்ன சறுக்கில் படிக்கிறது
தேய்ந்து போன கைகளில்
கவலை பேய் போல் பாய்கிறது
ஓய்ந்து கிடைக்கும் மூளையில்
காய்ந்த ரத்த ஏடு படர்கிறது
துடித்து கொல்லும் இதயத்தில்
தனிமை நெருப்பே கொதிக்கிறது
வெடித்து சிதறும் உடலுக்குள்
பூமியின் தீயே கிடக்கிறது
அந்த வற்றிய கிணற்றின்
அருகில் செல்ல செல்ல
அரூப வடிவாய் சாகிறேன்
அடுத்த நொடி முடிவில்
ஆழத்தில் அழுகிக் கிடக்கிறேன்
அழுகிய என்னை எடுக்கும்
அதே நொடியில் - மேலிருந்து
அதே நான் உயிரோடு விழுகிறேன்
அடிக்கடி விழுந்து
அழுகிக் கிடக்கும்
என்னை எடுக்க
நான் மட்டுமே நிற்கிறேன்
- காதலாரா