##தொலைந்த## ##மனம்## ##தேடுகின்றேன்##

விடியலில் விருப்பமின்றி
உறங்கும் கண்களில்
இடம்பிடித்த கனவில் - நான்
தடம்புரண்ட காட்சிகளை
அடம்பிடித்து மீண்டும்
படம் பிடிக்கிறேன் கவிதையில்


நீண்டதொரு காடு
கொண்ட நெடுமரங்கள்
விண்முட்ட நினைத்து
தோற்றது கண்டேன்


வெள்ளைப் பனியாலான
அழகிய குடையின் கீழ்
கரைந்துவிடும் நட்சத்திரங்கள்
புற்களில் கண்டேன்


நடந்து சென்ற பாதையிலே
கடந்து வந்த தூரங்களிலே
அடர்ந்ததொரு பச்சைக்கம்பளம்
தொடர்ந்து வரக் கண்டேன்


ஒற்றை மரங்கள் சில - அதில்
கற்றைப் பூக்கள் பல
காற்றுடன் கதைபேசும்
கூற்று கண்டேன்


ஓடுகின்ற ஓடையிலே
கூடுகின்ற சருகுகள் பட்டு
ஆடுகின்ற மீன்கள் ஊர்வலமாய்ப்
போகையில் இமைகள் ரெண்டும்
பூக்களாய் விரியக் கண்டேன்


சலசலக்கும் செடிகள்
விலக்கிவிடச் சொன்னது
கலகலவென்று கொட்டும்
அருவி ரசித்து விட சொன்னது
துருதுரு மனமும் சிதறிவிட்டேன்
சுறுசுறுப்பாக நடந்துவிட்டேன்


சுட்டு விடும் சூரியனும்
ஒளிந்து கொண்டான்
கதிர்கரத்தால் அன்று
தொட்டுவிடத் தாமதித்தான்


மேகமூட்டமாய் பூமிக்கு
தாகம் தணிக்கத் தவித்துக்
கொண்ட வானம்
நீண்ட நேரம் காத்திருக்கும்
அந்த நேரத்தில் தூரல்களாய்
வந்துவிட்ட கவிகள் கொண்டேன்


பிரிந்துவிட்ட தூக்கம்
பிரித்துப் போன அழகு
இயற்கையின் தரிசனம் – மீண்டும்
காண வேண்டும் ஒருதினம்


தொலைந்தமனம் தேடுகின்றேன்
நான் இயற்கையோடு
தொலைந்தமனம் தேடுகின்றேன் !!

எழுதியவர் : (12-Sep-12, 8:42 pm)
பார்வை : 189

மேலே