சுழலும் உலகம்

பொத்தி பொத்தி வளக்கயில,
பொத்துடுச்சு கருவமுள்ளு,
பொத்துகிட்டு ரத்தமெல்லாம்,
அவநெஞ்சில் ஊத்துதம்மா!

பொத்தியது வலிக்கவில்ல,
பொத்துகிட்டவன் அழவுமில்ல,
பெத்தெடுத்தவ - பொட்டமண்ணில்,
மண்புழுவா துடிதுடிச்சா!

ஒறவேதும் ஒன்டவில்ல,
ஆதரவும் ஏதுமில்ல,
எகத்தாளம் ஏத்தபின்னும்,
ஏணி போல ஏத்திவிட்டா.

கஞ்சி கூட வழியுமில்ல - இருந்தும்,
பசி அறிய விட்டதில்ல,
பட்டினியா கிடந்துங்கூட,
பட்டப்படிப்பு படிக்கவச்சா.

அ னா கூட அறிஞ்சதில்ல!
ஆனா அதுக்கும் வருந்தவில்ல,
ஆன மட்டும் கரசேக்க,
ஆன வலியும் தாங்கிக்கிட்டா!

தொட்டிலிலே தூங்கயில,
எட்டி ஒதச்சான் தூக்கயில,
தோலு மேல வளந்தபின்னும்,
தொட்டில்பழக்கம் மாறலயே!

பூமிகேட்டா வானம் தூவும்?
பூவும் புல்லும் செழிக்கத்தூறும்.
கொடுத்ததெல்லாம் போதுமுன்னு,
பூமியென்ன மாறாத்தூவும்?

மனுச குணம் ஏறிடுச்சி,
மறதி கூட சேர்ந்திடுச்சி,
மழத்தண்ணி மறந்துபோன,
காஞ்சவயலா தவிக்கவிட்டான்!

பூமிபாட்டுக்கு சுழண்டு ஓடும்,
காலம் அதுல பதில தேடும்,
சுத்திசுத்தி சுழலப்போல,
அகப்பட்டா சூழ்ந்திடுமே!

வென வெதச்சவன்,
வென அறுப்பான் - அவன் 
வெதச்ச வெத வெனயா இப்போ,
தொட்டிலிலே தூங்குதம்மா.

எழுதியவர் : ராஜ ராஜன் (23-Sep-12, 8:32 am)
பார்வை : 278

மேலே