21.ஆதலினால் காதலித்தேன்.! பொள்ளாச்சி அபி..
முடிந்து போன காதலென
முடிவு செய்து போன பின்னும்
முற்றத்து செடியின் மலராய்
பறிக்க பறிக்க பூக்கிறது
இந்த காதல்...!..
------------கவியமுதன்.பொ ----------
நான் புதிது என்பதாலும்,இதுவரை யாரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளவேயில்லை என்பதாலும்,ஒரு வார்த்தை..ஒரேயொரு வார்த்தைகூட எனக்கு புதுவருடத்திற்கான வாழ்த்துக்களைச் சொல்லவேயில்லை..! எனக்கு மிக அவமானமாகப் போயிற்று.ஒரு மரியாதைக்குக் கூடவா வாழ்த்து சொல்லக்கூடாது..? என்ன மனிதர்கள் இவர்கள் என்று வெறுத்துப் போனேன்.!
ஒரு மனிதனின் இருப்பை யாரும் மதியாமல் புறந்தள்ளுவது எவ்வளவு வேதனையான விஷயம். அதனை நான் அன்று அனுபவித்தேன். மறுநாள் பிறக்கவிருக்கும் புத்தாண்டு,எனக்கு முன்னதா கவே இப்படியொரு சோகத்தையும் அவமானத்தை யும் தரும் என்று நினைக்கவேயில்லை.மிகவும் கோபமாக வந்தது.அதனை யாரிடம் காட்டுவது.?
இவர்களிடம் வாழ்த்துப் பெறாவிட்டால் நமக்கென்ன விடியாமலா போய்விடும்.?. போகட்டும்.. அவர்கள் வழி அவர்களுக்கு..நம்வழி நமக்கு..,மனதை ஆறுதல் படுத்திக் கொள்வதற்காக எனக்குள் இவ்வாறெல்லாம் சமாதானம் சொல்லிக் கொண்டாலும்,மனதின் எங்கோ ஒருமூலையில், சிறிதாய்க் கனன்ற வன்மம்,நேரம் ஆக ஆக பெரும் நெருப்பாய் பரவி வருவதாகவும்,அது என் உடலை இன்னும் கொஞ்ச நேரத்தில் பொசுக்கிச் சாம்பலாக்கிவிடும் என்றும் தோன்றியது. உள்ளுக்குள் தகித்த இந்த வெம்மையின் பிரதிபலிப்போ என்னவோ..எனக்கு வழக்கத்தைவிட அதிகம் வியர்த்துக் கொண்டிருந்தது.
அதனைத் தணித்துக் கொள்ளும் முயற்சியாக, நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடித்தேன்.நீரின் குளுமை மெதுவாய் உடலில் பரவ, மனம் இப்போது ஓரளவு சமனப்பட்டிருந்தது. என்னை விட்டு நான் விலகிநின்று யோசிக்கத் துவங்கினேன்.அவர்கள் மீது கோபப்பட எந்தவெர்ரு நியாயமும் இல்லையே., இங்கு பணிக்கு வந்து மூன்று தினங்களே ஆயிற்று.யாரிடமும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. பழகவில்லை.நாம் யார் எப்படியென்றே மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது. யாரிடமும் இதுவரை பேசாதவனுக்கு, வலியச் சென்று வாழ்த்துச் சொன்னால் அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ..? என்ற அச்சமும் இருக்கலாம்.
அல்லது அறிமுகம் இல்லாத ஆண்களிடத்தில் வலியச் சென்று பேசாத பெண்களுக்கேயுரிய எச்சரிக்கையான,நல்லியல்பாகக் கூட இருக்கலாம்..! இவ்வாறு நினைத்தவுடன்,அந்தப் பெண்கள் மீது எனக்கு சற்று மரியாதை தோன்றியது.மேலும் என்னை சமாதானப்படுத்திக் கொள்ள இது சரியான காரணமாயும் தோன்றியது.
இப்போது முழுக்கமுழுக்க நான் நிதானத்திற்கு வந்திருந்தேன். “ என்ன முருகேசா..போலாமா.? என் குரலுக்காகவே காத்திருந்தது போல அவனும் கிளம்பினான்.
நானும் அவனும் பேருந்து நிலையம் நோக்கி நடந்துகொண்டிருந்தோம்.டிசம்பர் மாதத்தின் கடைசி இரவு..,இவ்வுலகத்தைவிட்டுப் பிரிகிறோமே..என்ற வருத்தம் போலும்,தனது கோபத்தையும் ஆதங்கத்தையும் நோயின் கடுமைபோல பனியாகப் பொழிந்து நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.
வேலைமுடிந்து செல்லும்போதெல்லாம் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டுவரும் முருகேசன்,அன்று பேசவில்லை.ஏதோ ஆழ்ந்த யோசனையிலிருப்பதாகப் பட்டது.எனக்கு இது வித்தியாசமாகத் தெரியவே.. “என்ன..யோசனை..? அமைதியாக வருகிறாயே..?”
“நாளைக்கு நியூஇயர்..சுமதியைப் பார்க்க முடியாது. ஆனால் நாளை மறுநாள் கம்பெனிக்கு வரும்போது நியூ இயருக்காக வித்தியாசமான முறையில் ஏதாவது செய்து அசத்தவேண்டும்.செலவு செய்வதற்கு அதிக பணவசதியும் இப்போது கிடையாது.என்ன செய்யலாம்.? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்”.
“அப்படியா..நல்லது.! பேசாமல் கம்பெனிக்கு பின்னால் தூரத்தில் தெரிகிற மலையை தூக்கிவந்து பக்கத்தில் வைத்து அதன்மீது ஹேப்பி நியூ இயர் என எழுதி வைத்துவிடேன்..” என்றேன்.
டேய் எனக்கு கெட்ட கோபம் வந்துவிடும்..ஏதாவது நல்ல யோசனையாய் சொல்வாய் என்று நினைத்துச் சொன்னால்.., நீ கிண்டல் செய்கிறாயே..நீயும் காதலித்துப் பார்த்திருந்தால் எனது அவஸ்தை உனக்குப் புரியும்”
சரி..சரி..யோசிப்போம்..பொறு.என்று அவனை அமைதிப்படுத்தி விட்டு,நானும் யோசனையில் மூழ்கினேன்.சில நிமிடங்கள் எங்களின் காலடியில் நகர்ந்தது.எனக்குள் உதித்த திட்டத்தை கொஞ்சம் தயக்கத்துடன்தான் அவனிடம் சொன்னேன்.
“அருமை..! அப்படியே செய்வோம்..ஆனால் ஒருவருக்காக என இல்லாமல் அனைவருக்குமாகவே அதனைச் செய்து விட்டால் என்ன.? ஆனால் இதில் எந்த வில்லங்கமும் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு என்பதை நினைவில் வைத்துக் கொள்.” என்றான்.மேலும் சிலநிமிடங்கள் கழிந்தபோது என்ன நினைத்தானோ தெரியவில்லை. நான் மட்டும் தனியாக செய்ததாக இருக்கவேண்டாம். இருவரும் சேர்ந்து செய்ததாகவே அது இருக்கட்டும் என்றும் அவன் தெரிவித்தபோது, “எனக்கு அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாது. அப்படியிருக்கும்போது நான் எதற்கு உன்னுடன் இணைந்து செய்ததாக இருக்கவேண்டும்.?” என்று கேட்டபோது இல்லையில்லை..இருவரும் சேர்ந்து செய்ததாகத்தான் இருக்கவேண்டும் என்று அவன் பிடிவாதமாக இருக்கவே,சரி இதில் ஏதாவது வில்லங்கம் வரும் என்று பயந்திருப்பான் போலும்..,பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு,அத்திட்டத்தை
செயல்படுத்தி னோம்.
ஆனால்,அதன் எதிர்விளைவு..?
ஆதலினால் காதலித்தேன் மீண்டும் தொடர்கிறேன்.