தாயின் வரவுக்காய் காத்திருந்த குழந்தைகள்

உப்புக்காற்றும் சிந்தும்
கண்ணீர் எங்கள் வாழ்வை பார்த்து '
தொப்புள் உறவு நீ
நீரில் நனைத்தாய் எங்கள் விழிகளை !

தலை குனிந்து போகாது எங்கள் வீரம்
கைநீட்டி உயிர் வாழாது எங்கள் மானம் !
கவரி மான்கள் அல்லவா நாங்கள்
சவாரி செய்யுமா பகை எங்களுடன் !

ஆயிரம் ஆயிரம் அழுத விழிகளை
அன்புடன் அணைக்க தவறிய கரங்கள் !
பார்க்கும் இடமெல்லாம் கோவில்
சுமந்த எங்கள் மண்ணில்
பிணங்கள் நிறைந்த நாளில்
எங்கே சென்றாய் இறைவா ?

வாழ்வதுக்காய் வாழ்க்கை துறந்தோம்
சாவதுக்காய் களத்தில் நிமிர்ந்தோம்
வீழும்போது விதைகள் ஆனோம்
விதைகளில் இருந்து பிறந்தோம்
விடியல்களாக ?

நிலவு வடித்த கண்ணீரில்
தாகம் தீர்த்தோம்
காற்று வரைந்த கவிகளில்
கண்ணீர் வடித்தோம் !
தமிழா விலகி இருந்த உன்னைப்பார்த்து
உயிரை துறந்தோம்!

நிலத்தை நேசித்தோம்
நிலமும் நேசித்தது எங்களை
நித்தியமாய் துயில் கொள்கிறோம்
உங்களை நம்பி விழிக்க அஞ்சுவதால் !

எங்கள் குருதியில்
சிவந்தது தாய்நிலம் !
வானம் அழுதது
என் அன்னை முகம் பார்த்து!

விடியும் வரை
தூங்காது விழிகள்!
சாகும் வரை சாகாது எங்கள்
மானம் ..!

தாஸ்

எழுதியவர் : Thas (26-Sep-12, 9:07 pm)
சேர்த்தது : Thas
பார்வை : 133

மேலே