கடவுளே இருக்கின்றாயா ? - கே.எஸ்.கலை

நீ தந்த உயிர் கொண்டு - உனை
நிந்தித்துக் கணை தொடுப்பேன்
இதயத்தில் இருக்கின்ற இந்த
இம்சைகளைக் கொட்டித் தீர்ப்பேன் !

தொன்மை கொண்ட உன் நாமம்
வன்மை கொண்ட நெஞ்சங்களால்
இன்மை செய்யும் போதெலாம்
பொறுமை கொண்டு இருப்பதேனோ ?

மனித நெறி தடம் புரண்டு
மத வெறியின் ஆட்டம் இங்கே
மனம் அற்றுப் போனாயோ ?
மதம் என்று போனாயோ ?

கண்ணப்ப நாயன் அவன்-தன்
கண்கொண்டு கண் தந்தான்
அத்தோடு நிற்காமல் - வேட்டைக்
காட்டிறைச்சி உனக்களித்தான் !

அன்புத் தானே சிவமென்று
அன்று நீயும் சொல்லித் தந்தாய்
அதை அழிக்க வாதை கொண்டு
அவதாரம் ஏன் கொண்டாய் ?

புலாலுக்குத் தடை விதித்து
பூமாலை நீ கேட்டாய்
மீன்காரி மாலையிட்டால்
தாங்காதோ உன் கழுத்து ?

உயிர் பலியும் நர பலியும்
குடிப்பதற்கு மது சாரும்
உனக்கென்று நரன் தந்தால்
தட்டிக் கேட்ட முடியாதோ ?

கடல் கடந்து குடி கொண்டு –உனக்கு
கருங்கல்லில் வீடமைத்தான்
உடன் பிறந்த சொந்தமிங்கே
குடிசை இன்றி துடிக்கிறதே ?

உணர்வற்ற செயல்கள் இங்கே
தினந்தோறும் நடக்கிறதே
உதிரம் கொதிக்கும் செய்கைகளை
உணராயோ என் நாதா?

உருவம் தந்து அமர வைத்தான்
உடல் மறைக்க பூச்சழித்தான்
பாவத்தால் பரிகாரம்
பாவம் தானே நம் சைவம் ?

தோலடித்துத் தாளமிட்டு
தோற்கடித்துப் போய்விட்டான்
வாயடைத்து மூச்சடைத்து
வேடிக்கைப் பார்ப்பாயோ ?

மனிதனைநீ படைத்தாயா
ஆதாரம் அதற்குண்டா?
மனிதனுனைப் படைத்தானென்று
ஆதாரம் இங்குண்டு !

புத்தி கெட்டுப் போனாயோ ?
சக்தி கெட்டுப் போனாயோ ?
தட்டிக் கேட்ட முடியாமல்
தரணி விட்டுப் போனாயோ ?

தூணிலும் இருப்பாயாம்
துரும்பிலும் இருபாயாம்-
எந்த தூண்? எந்த துரும்பு?
விலாசம் தா வந்துப் பார்ப்பேன் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (29-Sep-12, 6:51 am)
பார்வை : 438

மேலே