கடவுள் யாரடா?

புழுதி தெருவோரம்
கந்தல் ஆடையுடன்
புதுமலராய் நானிருக்க
புன்னகை புரிந்தபடி
கண்ணாலே எனை அழைத்து
ஒரு ஆடை தருபவனை
கண்ணாலே நன்றி சொல்லி
கனிவுடனே கடவுள் என்பேன்

நெடுநாளாய் பசித்திருக்க
என் உணர்வு மரத்திருக்க
வயராற சோறு தந்து
வாஞ்சையுடன் எனையணைத்து
என் கன்ன குழியிடையில்
முத்தமொன்று தருபவனை
கை எடுத்து வணங்கி விட்டு
கனிவுடனே கடவுள் என்பேன்

தொழு நோயில் நானிருக்க
உடல் முழுதும் வலியிருக்க
அன்பாக ஒரு வார்த்தை
ஆதரவாய் ஒரு பார்வை
வாய் நிறைந்த வாழ்த்துமழை
குன்றாமல் கொடுப்பவனை
கும்பிட்டு வணங்கி விட்டு
குரலெடுத்து கடவுள் என்பேன்

பஞ்சணையில் படுத்துறங்கி
பல்லக்கில் பவனிவந்தும்
தன் மக்கள் துயர்கண்டு
தான் கலங்கி நிற்பவனை
தானை பல கொண்டவனை
தாள் மடித்து வணங்கி விட்டு
தயை கூர்ந்து நோக்கிவிட்டு
தையிரியமாய் கடவுள் என்பேன்

எழுதியவர் : nilakavi (30-Sep-12, 1:53 am)
பார்வை : 285

மேலே