வயல்காடும் என் இரு மாடுகளும்
வியர்வைக்கு
விலை கிடையாது
என் வீட்டு கலப்பைக்கு
ஓய்வு கிடையாது
மழை வந்தால்
விதை நெல்லோடும்
வெயில் வந்தால்
அறுவடைக்கு காத்திருக்கும்
குடும்பம் எனது
ஒரு ஜோடி காளை மாடுகள்
கலப்பை கட்டிருப்பதாய் நினைத்து
கட்டுத்தறி சுற்றும் மேதாவிகள்
உலவுக்கென்று
பழக்கப்பட்ட மாடுகள் அதற்கு
படுத்துறங்க தெரியாது
கலனி தண்ணீர் குடித்து
கழனி முழுதும் உழுதாலும்
இளைப்பாற இமை மூடாது
தோளில் கலப்பை கொண்டு
தொழியில் என் அய்யா இறங்கும் போது
மாட்டோடு கலப்பையில்
நானும் அமர்ந்து கொள்வேன்
காடு முழுக்க உழுது
கால் கடுத்து என் அய்யா உக்காந்தாலும்
ஏர் ஓட்டம் நிற்காது
என் அய்யா வாய்ப்பாட்டும் ஓயாது
உழவு முடிந்ததும்
தவிடு புண்ணாக்கு கொஞ்சம்
அதிகமாய் அன்று மட்டும் மாடுகளுக்கு
ராமன் லெட்சுமணன்
மாட்டின் பெயர்
பெயருக்கு ஏற்றால் போல்
ஒன்றுக்கு பசித்தால்
மட்டொன்று கத்தும்
சும்மா இருக்கிற நேரம்
மாடு ரெண்டையும் கூட்டிகிட்டு
வயக்காடு சுத்துவேன்
பச்சை புள்ள மேயாம
பக்கத்துக்கு கொல்லையில மேஞ்சு
என்னை பரிதவிக்க விடும்
மாடு என்றாலும்
அது பேசும் பாசை புரியும்
மனிதன் என்றாலும்
நான் வச்ச பாசம் அதுக்கு தெரியும்
அன்பிற்கு ஏது மொழி..?...
தவிடு தின்னும் லெட்சுமணன்
தண்ணீ குடிக்காம
என்னையே பாக்கும் போது
அய்யாக்கு தெரியாம
திருட்டு தனமாய் தவிடு நான் கொடுக்க
ராமன் கத்தியே காட்டி கொடுத்த காலமுண்டு
கார்மேகம் மண் நனைக்க
காஇருள் இரவை அணைக்க
இடியும் மின்னலும் வந்து வந்து போக
விடியும் வரை மழையின் நுரை
வரப்பனைத்தது அது ஓர் காலம்
சாயம் போன வானவில்லாய்
மாறிப்போன விவசாயம்
ஓரம் கட்டிய கலப்பை
வீரியம் போன மண் வளம்
பள்ளிக்கூடம் போன நேரம் பாத்து
மாடு ரெண்டும் வித்தாச்சு
கட்டுத்தறியும் சுத்தமாச்சு
அம்மா என்ற அழைப்பு சத்தம்
மாட்டோடு போயேபோச்சு
சந்தையில மாடு கத்துற சத்தம்
என் காது வரைக்கும் கேட்டு
ஓடிபோய் பாக்கும் போது
ராமன் ஒரு வண்டியில
லெட்சுமணன் ஒரு வண்டியில
கல்யாணம் முடுச்சு
மறுவீடு போற புது பொண்ணாய்
என் மாடுகள் ரெண்டும்
கண்ணீர் சிந்தி போனது இன்னும்
என் கண்ணுக்குளே நிக்கிது
கரையானுக்கு இரையான
கலப்பையின் மீதம் மட்டும்
கதையாய் சொல்லி
தடவி கொடுகிறது
என் கடந்த காலத்தை
மாட்டோடு பேசிக்கிட்டு
வரப்போடு பாடிக்கிட்டு
வாழையிலை குடைபுடுச்சு
மழையில நனசுகிட்டு
வாழ்ந்தது ஓர் காலம்
படிக்காம இருந்துருந்தா
இப்படி பட்டணம் வர தேவையில்லை
பழச நினைக்காம இருந்த
நாம வாழ்றதுல அர்த்தமே இல்லை
மாசம் ஒரு முறை போனாலும்
வயகாடு சுத்த தயங்கியதில்லை
வயசு மாரி போனாலும்
என் குழந்தை பருவம் நினைவுகள்
பசுமை மாறியதில்லை.....