ஈப்பு சிந்தனைகள் -பகுதி 1
ஈர்ப்பு சிந்தனைகள்
இவை எனது எண்ண ஓட்டங்கள் மட்டுமே. இவற்றில் கற்பனை கலந்து உள்ளது உண்மை. இவை எனது அனுபவங்கள் அல்ல. இவை எனது புரிதல் மட்டுமே.
அவை சரியா தவறா என்ற ஆராய்ச்சியில் நான் இதுவரை இறங்கவில்லை.
இதில் எனது வாழ்க்கை சம்பந்தப்பட்டு இருப்பதாக எண்ணம் வந்தால் அதற்கு விளக்கம் எதிர்பார்க்க வேண்டாம். இந்த எழுத்து மூலம் என்னையோ எனது வாழ்க்கையையோ அல்லது எனது அனுபவத்தையோ எடை போடும் முயற்சியில் யாரும் இறங்கவேண்டாம்.
இந்த எண்ணத் தொடரோட்டம் யாருக்கும் வழிகாட்டவோ அல்லது யாரிடமும் இருந்து கேள்வி-பதில் விமர்சனங்களை எதிர்பார்த்தோ நான் எழுதவில்லை.
இருப்பினும் எவரேனும் ஆர்வம் காட்டினால் அவர்களுடன் தனி விடுகை மூலம் நெடிய தொடர் கொண்டு எனது எண்ணங்களை பங்கு கொள்ள தயாராக இருக்கிறேன்.
காதலை கருணையாகக் கருதினால் வரும் மன அழுத்தம் அதனால் பாரமாகிப்போகும் உறவு, அடுத்து வரும் பிரிவு, அதனால் வரும் தனிமை இப்படி தொடர்ந்து வரும் வேதனையின் நடுவில் வரும் ஈர்ப்பு சிந்தனைகளின் தொடரோட்டம் இவை.
------------------------------------------------------------------
கடற்கரை ஓரம் காலாற நடந்து செல்லும் ஆர்வத்துடன் கன்னியாகுமரியின் கடற்கரை ஓரம் அவளுடன் கைகோர்த்து சிறிது தூரம் நடந்து சென்றேன். மனது அமைதியாக இருந்தது. காற்று மெல்ல வீசிக்கொண்டு இருந்தது. மனது பழைய இளையராஜாவின் ரம்மியமான மெல்லிசைப் பாடல் ஒன்றை நினைவுக்கு கொண்டுவர அதை வாய் மெதுவாக லயித்து பாடிக்கொண்டிருந்தது. அவளோ ஒன்றும் பேசாமல் பொழுதையும் காற்றையும் ரசித்துக் கொண்டு நடந்து வந்து கொண்டு வந்தாள்.
எனக்கு இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் பிடிக்கும். அவளுக்கு பி. சுசீலாவின் குரலில் ஒரு அலாதி பிரியம்.
கடற்கரை காற்றின் சுகம் அனுபவித்த பின் தங்கும் விடுதி வந்து சேர்ந்தோம். தங்கி விட்டு மறுநாள் ராமேஸ்வரம் பயணம் ஆனோம். பிறகு மதுரை, ஸ்ரீரங்கம், தஞ்சை, மகாபலிபுரம் என சுற்றி விட்டு டில்லி வந்து சேர்ந்தோம். 10 நாள் உல்லாசப் பயணம் முடித்து ஊர் வந்து சேர்ந்து ஆயிற்று. இனி வழக்கம் போல செக்குமாட்டு பிழைப்புக்கு ஒரே வட்ட்திற்குள் ஓடி பிழைக்க தொடங்க வேண்டியதுதான்.
திருமணம் ஆகி பதினான்கு வருடங்கள் ஓடியது தெரியாமலேயே கழிந்தது விட்டன. ஏனெனில், எதையும் இதுவரை நாங்கள் விவாதமாக எடுத்துக்கொண்டதில்லை. அப்படியொரு சந்தர்ப்பம் வரவில்லை என்று பொருள் அல்ல. வரும்போது மற்ற செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எண்ணத்தையும் பேச்சையும் மாற்றி விடுவது வழக்கம்.
அன்றும் அதே போல உல்லாசப்பயணம் சென்று வந்து இறங்கிய பிற்பாடு மனம் லேசாக இருந்த போது பேசிக்கொண்டு இருந்தோம். டில்லியின் தட்ப வெப்ப நிலை, அதில் மாறுபாடு, மழை, குளிர், குளிர் நேர இரவு, அலுவலகத்தில் இருந்து எனது காலந்தாழ்த்தி வரும் பழக்கம், அவளும் குழந்தைகளும் எனக்காகக் காத்திருக்கும் தருணங்கள், இவை போன்றவை பேச்சில் வந்தன. ரம்மியமாக முடிந்தது பேச்சு. இனிதே கழிந்தன பொழுது.
நான் அலுவலகம் செல்லத் தொடங்கி விட்டேன். வார விடுமுறையில் கடைச்சந்தைக்கு செல்வது வழக்கமாகக் கொண்டு இருந்தோம். சென்று விட்டு வந்தோம். கடைச்சந்தையில் நடந்த ஒரு நிகழ்வு இருவரையும் மிகவும் பாதித்து இருந்தது. அதைப்பற்றி பேச விரும்பியும் இருவரும் தவிர்த்து வந்தோம். இருவரும் தவிர்ப்பது இருவருக்கும் நன்றாகத் தெரிந்தது.
வீடு திரும்பிய சிறிது நேரத்தில், தெரிந்த நண்பர் தனது மனைவியுடன் வந்தார். அவர்களுக்குள் ஏதோ பிரச்சினை. வந்து தங்களின் கணவன்-மனைவி பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டு போனார்கள்.
அவர்கள் சென்ற பின் அவர்களின் பிரச்சினையை அலசத் தொடங்கியதில் எங்களின் பிரச்சினை எங்களை அறியாமல் எங்களிடம் தொடங்கியது. ஏனெனில், கடைச்சந்தையில் நடந்த நிக்ழ்வு இருவரையும் பாதித்து இருந்தது. அதைப்பற்றி பேசுவதை இருவரும் தவிர்த்து வந்தோம். அதோடு நண்பரின் குடும்பப் பிரச்சினையும் வந்ததில் எங்களை அறியாமல் எங்களுள் புகுந்து கொண்ட மன அழுத்தம் எங்களையும் தாக்கத்தொடங்கியது.
கருத்துகளில் ஒரு இடைவெளி விழுந்தது. பேச்சில் தடிமம் தொடங்கியது. சரியாகி விடும் என்று இருவரும் நினைத்து இருந்தோம். அது தவறான எண்ணம் என்பதை காலம் உண்ர்த்தியது. எங்களுள் பிரிவு தலை தூக்கியது. இருவரும் விலகத்தொடங்கினோம். உறவில் விரிசல் தொடங்கியது.
நான் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தேன். எனது பணி முழுவதும் எல்லையில் இருந்ததால் மனைவி குழந்தைகளை சொந்த ஊரில் தங்க வைத்து வசதிகளை செய்து கொடுத்து வைத்திருந்தேன். எனது இரண்டாவது பணி வருடத்தில் எனக்கு பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்தனர். பதினான்கு வருடங்கள் ஓடி விட்டன. மூத்த பெண் குழந்தைக்கு வயது பதிமூன்று ஆகிறது. இளைய பெண் குழ்ந்தைக்கு வயது எட்டு. மூத்த பெண் குழந்தை பிறந்த இரண்டு வருடங்கள் கழித்து, எனது நான்காம் பணி வருடத்தில், (மூன்று வருட பணி முடிவிற்கு பிறகு வரும் வேலை மாற்று வசதியைப் பயன்படுத்தி) எனக்கு டில்லிக்கு பணிமாறுதல் வாங்கி தலைமை அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தேன். அன்றிலிருந்து டில்லியில் பணியாற்றி வந்ததால், குடும்பத்துடன் டில்லியில் வசித்து வர முடிந்தது.
நான் திருச்சியை சேர்ந்த அரியலூர் பக்கத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவன். கல்லூரி படிப்பை முடித்து விட்டு ராணுவத்தில் சேரும் பொருட்டு ஜம்மு வந்து இருபதாவது வயதில் பணியில் சேர்ந்து முப்பதிரண்டாம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக பணி விடுப்பு பெற்று தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். ராணுவ பணியை விட்டு பதினான்கு ஆண்டுகளாகின்றன. அவளை பிரிந்து பத்து வருடங்கள் ஆகின்றன.
சீராக கூறினால், பத்தொன்பதாவது வயதில் கல்லூரி படிப்பு; இருபதாவது வயதில் ராணுவத்தில் சேர்ப்பு; இருபத்தி இரண்டாம் வபதில் திருமணம்;, இருபத்தி மூன்றாம் வயதில் முதல் பெண் குழந்தைக்கு தகப்பனாகி, இருப்பத்தி நான்கு வயதில் டில்லிக்கு மாறுதல் பெற்று, இருபத்தி ஐந்தாவது வயதில் இருந்து குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்தேன்.
எனது இருபத்தி எட்டாம் வயதில் எனது இரண்டாவது பெண் குழந்தை பிறந்தாள். முப்பத்தி இரண்டாவது வயதில் ராணுவப்பணியில் இருந்து விடுப்பு பெற்றேன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி நான்கு வருடங்களில் எனது முப்பத்தி ஆறாவது வயதில் என்னவள் என்னை விட்டு பிரிந்து சென்று விட்ட நிலை.
நான் நினைவு கூர்வது எனது முப்பத்தி ஐந்தாவது வயது பருவத்தின் போது நடந்த நிகழ்வு.
காதல், பாசம் கருணையாகக் கருதப்படும்போது, உறவுகள் பாரமாகிப் போகின்றன.
பதினான்கு வருடங்களாக நெருங்கிய காதலாக இருந்த உறவு, திடீரென விரிசல் வந்து பிரிவில் முடியும் என நினைத்து பார்க்கவேயில்லை.
எனக்கு திருமணமாகும்போது எனக்கு வயது இருபத்தி இரண்டு. அவளுக்கு வயது பத்தொன்பது. முதல் குழந்தை பிறக்கும்போது, அவளுக்கு வயது இருபது. அவளுடைய இருபத்தி ஒரு வயது வரை அவளது சொந்த ஊரிலேயே அவளுக்கு வசதி செய்து தந்திருந்தேன். முதல் குழந்தையுடன் அவள் தனியாக ஊரில் இருக்கும்போதுதான் அந்த சோக விபத்து நடந்தது. அவளுக்கு நெருக்கமான ஒரு நபரால் அவள் சீரழிக்கப்பட்டாள். அந்த நபர் முக்கிய புள்ளியோ, மிகவும் வேண்டப்பட்ட நபரோ அல்ல. அது அவள் தவறும் அல்ல. அவளால் அதை பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு அவள் தள்ளப்பட்டு, அவளை மீட்டு எடுத்து வந்தேன்.
சீரழித்தவன் அவளுக்கு தெரிந்த நபர் மற்றும் அவள் ஊர்க்காரன் என்பதால் அவளின் மன பாரத்தை அவளால் எங்கும் இறக்கி வைக்க முடியவில்லை. அவள் சொந்த ஊரில் இருந்தால் பாதுகாப்பாக உணர்வதாக கூறி விருப்பப்பட்டதால் அவளின் விருப்பத்திற்கு இசைந்து அவளின் ஊரில் அவள் தங்க வசதியான ஏற்பாடு செய்தேன்.
எனக்கு விபரம் தெரிந்து, அவளுக்கு ஆறுதல் அளித்து, எனக்கு பணி மாற்றம் செய்து கொண்டு அவளை என்னுடன் சேர்த்து கொண்டேன். அவளுக்கு அந்த விபத்து பற்றிய நினைவு வராமல் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டேன். வருடங்கள் பல ஓடியதால், இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். நான் அவளிடம் வைத்து இருந்தது உண்மையான காதல் என்பதை அவள் உணர்ந்து இருந்ததால் எங்கள் வாழ்க்கை மிக இனிதாக ஓடியது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த உல்லாசப்பயணம் மற்றும் நண்பரின் வரவும் எங்களின் பேச்சு மூலம் எங்களின் பிரிவு தொடங்கிய நிலையும் என்பதை நான் நினைவு கூர்கிறேன். மனம் முழுவதும் வேதனை நிறைந்து உள்ளது.
கடைச்சந்தையில் நடந்த நிகழ்வு எங்கள் இருவரையும் பாதித்ததையும் அதைப்பற்றி பேச இருவரும் தவிர்த்ததையும் தவறு என்பதை காலம் எனக்கு உணர்த்தியது ஆனால் அது காலங்கடந்த உணர்வானது.
நாங்கள் பொருள்கள் வாங்கும் இடத்தில் நின்று கொண்டு ஒருவர் தனது ஆத்திரத்தை தீர்க்கும் பொருட்டு தனது மனக்குறையை மிக நீண்ட நேரம் பேசிகொண்டு இருந்து விட்டு நகர்ந்தார். நாங்கள் வேறு கடைக்கு நகர்ந்த போது, எங்களையும் நகர விடாமல் தடுத்து, அவரையும் நிறுத்தாமல் பொறுமையை சோதித்தது சிறிது அசாதாரணமானதாக இருந்தது.
அவர் சென்றபிறகு என் மனைவி தடுத்தும், கடைக்காரரிடம் எரிச்சலில் என்ன என்று கேட்கும்போது, அவர் கூறிய செய்தி இருவரையும் பாதித்தது. மவுனம் மட்டுமே மிஞ்சியது.
மனக்குறையை கொட்டியவரின் கதை என்னவென்றால், பரந்த மனப்பான்மை என்ற பெயரில் ஒரு விலை மாதுவிற்கு வாழ்வளிப்பதாக எண்ணி திருமணம் செய்து கொண்டதின் விளைவை அவர் அனுபவிப்பதாக அவர் சொன்னதற்கு கடைக்காரரின் கருத்துதான் எங்களை மிகவும் பாதித்தது. வாழ்க்கை என்பது அன்பும் காதலும் நிறைந்ததாக இருந்தால் மகிழ்ச்சி நிரம்பி இருக்கும். பரந்த மனப்பான்மை என்ற பெயரில் செய்வது எதுவும் பாசம் எனும் பெயரில் போலியே. ஒரு கட்டத்தில் இப்படி மனக்குறையில் வந்து கடைவீதியில்தான் முடியும். அவளிடம் கூற முடியாததை இப்படி கடை வீதியில்தான் மனக்குறையாகக் கொட்டித் தீர்க்க வேண்டும்.
கடைக்காரர் எங்களை நகரவிடாமல், அவரையும் தடுக்காமல் பொறுமையை சோதித்ததால் நான் என்ன என்று கேட்கப் போனபோது, என் மனைவி என்னை தடுத்தது, அதையும் மீறி நான் கேட்டது, அதற்கு இப்படி ஒரு பதில் கிடைத்தது எங்களுக்கு மிகவும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால் நாங்கள் இருவரும் அந்த நிகழ்வைப் பற்றி பேசுவதைத் தவிர்தோம்.
எனது நண்பர் வந்து தங்களின் உறவுப் பிரச்சினையை கூறி தீர்வு கண்டு போனதும், நம்பிக்கை பற்றிய நிகழ்வாகவே இருந்தது. கணவன்-மனைவியிடம் இருக்க வேண்டிய நம்பிக்கை மற்றும் ஒளிவு மறைவு இல்லாமையைப் பற்றிப் பேசி தீர்வு கண்டு விட்டு சென்றனர்.
அவரிகளின் பிரச்சினையை பற்றி பேசி அவர்களைப் பற்றிய கருத்துகள் கூறும்போது எங்களிடம் வந்த கருத்து வேறுபாடு எங்களிடம் விரிசலை ஏற்படுத்தியதைத் தடுக்க முடியவில்லை. இந்த நிகழ்வு நடந்த ஓராண்டுக்கு பிறகு, நாங்கள் நிரந்தரமாகப் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டதுதான் மனம் முழுக்க வேதனையாக நிறைந்து உள்ளது,
கடை நிகழ்ச்சி ஆழ் மனத்தில் அவள் கொண்டிருந்த வடுவை கீறி எடுத்தது. அவள் தடுக்கப்போயும் நான் கேட்டது ஒரு யதார்த்தம். எந்த விதத்திலும் உள்நோக்கம் கொண்ட செயல் அல்ல. அதைப் பற்றி நாங்கள் பேசுவதை தவிர்த்ததற்கு காரணம் அவளின் பழைய விபத்து அவளின் மனதைக் கீறி விட்டு விடுமே என்ற பயம்தான் இருவருக்கும்.
ஆனால் நண்பரின் விவகாரத்தில் நாங்கள் இருவரும் பேசிய பேச்சு, கடையில் நான் விசாரித்ததில் உள்நோக்கம் இருப்பதான சாயலை கொடுத்தது அவளுக்கு. அதை வெளிப்படையாகக் கொட்டி தீர்க்க முடியாமல் இருந்தாள். அதன் பிறகு நான் செய்யும் ஒவ்வொரு செயலும் அவள் மீதான எனது இரக்க செயலாக அவளுக்கு பட்டுக்கொண்டிருந்தது.
அவளின் மனது கொண்டிருந்த என்னைப்பற்றிய எண்ணங்கள் என்னவென்றால், நான் இதுவரை அவளிடம் காட்டியது எல்லாம் பரிதாபம். அதை அவளிடம் சொல்ல முடியாமல் நான் தவித்து மறைத்து வருகிறேன். அதை காதலாக காட்டிக்கொண்டிருக்கிறேன். இந்த எண்ணம் அவளுக்கு தோன்றியதில் இருந்து, அவள் தன்னை எனக்கு பாரமாகக் கருதத் தொடங்கி விட்டாள். எனது ஒவ்வொரு செயலும் அவளுக்கு கருணையாகப் தெரியத்தொடங்கின. ஒரு வருடம் ஓடி விட்டது.
கடை நிகழ்வை தள்ளிப் போடாமல் விவாதித்து அதை ஒன்றுமில்லாமல் செய்திருந்தால் எங்களது பிரிவை தவிர்த்து இருக்கலாம்.
தனக்கு நேர்ந்த விபத்தை என்னிடம் சொன்ன பிறகு அவள் தனது ஆழ் மனதில் அதை பூட்டி வைத்து இருந்திருக்கிறாள். அவளை அறியாமல் கடை நிகழ்வால் அது மீண்டும் உயிர் பெற்று எழுந்துள்ளது. அதில் இருந்து அவள் கொண்ட எண்ணங்கள் –
“நான் விலகியிருந்திருக்க வேண்டும். இவரிடம் இவ்வளவு உரிமை பாராட்டி இருந்திருக்க கூடாது. இவர் என்மீது கருணை கொண்டுதான் பெருந்தன்மையாக என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இவருக்கு நான் ஏற்றவள் அல்ல. இது தெரியாமல் இத்தனை காலமாக உரிமை கொண்டாடி இருக்கிறேன். நான் வெட்கங்கெட்டவள். அடுத்தவரின் தயவில் எனது வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கிறேன். இவருக்கு பாரமாக இருந்திருக்கிறேன். இனி இப்படி ஒரு இழிவு வாழ்க்கை வாழக்கூடாது. அடுத்தவருக்கு பாரமாக இருக்கக்கூடாது. இவர் எனக்கு செய்யும் எதுவும் அவருக்கு பாரமாகும் முன்பே இதிலிருந்து விடுபடவேண்டும்.” இந்த எண்ணங்கள் அவளிடம் வளர வளர, எனது இயல்பான உரிமையான சின்ன சின்ன சிணுங்கலான மறுப்புகளும், அவளுக்கு, அவளை நான் பாரமாக நினைப்பதாக தோன்றத் தொடங்கியதற்கு காரணமாக அமைந்தது. நான் என் இயல்பில் இருக்க முடியவில்லை. குழந்தைகளிடம் எங்கள் பிரச்சினைக்கு காரணத்தை வெளிப்படையாகக் கூற முடியவில்லை.
அவளுக்கு எனது காதலை புரிய வைப்பது கடினமாகிக் கொண்டிருந்தது. அவள் எனது ஒவ்வொரு செயலையும் அலசி ஆராயத் தொடங்கினாள். சந்தேகப்படவில்லை. ஆனால் ஆராயத்தொடங்கினாள். அவளின் நிம்மதி கெட்டது. எனது நிம்மதி கெட்டது.
நான் எதை செய்தாலும் அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று நெருடலாகவே இருக்கத் தொடங்கியது. மனோ தத்துவ நிபுணரிடம் செல்லலாம் என யோசனை கூறினேன். அதுவும் அவளுக்கு தவறாகப் பட்டது. செய்வது அறியாது திகைத்தேன். பிறரிடம் சொல்லி ஆறுதல் கேட்க நினைத்தால், கடை விரிப்பதாக நினைத்து விடுவாள். அதுவே பிரிவினைக்கு வித்தாகிவிடும் என்று அச்சமாகிப் போனது.
அவள் தடுக்கி விழுந்தது பதினான்கு வருடங்களுக்கு முன்பு இல்லை இப்பொழுதுதான் என்பதை நன்றாக உணர்ந்தேன். பொறுமை காத்தேன். எனது பொறுமை அவளை நான் பொறுத்துப் போவதாக அவளுக்குப்பட அவள் தான் எனக்கு இன்னும் அதிக பாரமாகி விட்டதாக எண்ணத் தொடங்கினாள்.
மிக நெருக்கமாக சென்று அன்பு மிகுதியால் அவளுக்கு புரிய வைக்க நான் எடுத்த எல்லா முயற்சிகளும் அவளது மன பாரத்தை அதிகப்படுத்தவே செய்தன குறைக்கும் வழியாயில்லை. அவள் அவளை விட்டு வெளி வருவதாயில்லை. நான் தனிமையில் தவிக்க தொடங்கினேன். நான் மிகவும் விளையாட்டாய் மனங்கவரும் படி பேசும் பழக்கம் உள்ளவன். ஆனால் அந்த வழியிலும் எனது முயற்சிகள் தோல்வியே கண்டன.
எங்கள் இருவருக்கும் நடுவில் இடைவெளி தொடங்கி அதிகமாகிக் கொண்டே போனது. அதை நிறுத்த முடியவில்லை. எனக்கும் அவள் என்னிடத்தில் இதுநாள் வரை நெருங்கி இருந்திருப்பது நன்றி மிகுதியால்தான், அன்பு மிகுதியால் அல்ல என்று தோன்றத் தொடங்கியது.
குழந்தைகளுக்கு எங்களின் இடைவெளி புரிந்தது ஆனால் காரணம் புரியாமல் தவித்தனர். வேதனை கொண்டனர். இது கணவன்-மனைவி பிரச்சினை குழந்தைகளுக்கு புரிய வாய்ப்பு இல்லை எனவே கண்டு கொள்ள வேண்டாம் எல்லாம் சரியாகி விடும் என்று அவர்களுக்கு சமாதானம் கூறி இருவருமே தட்டி கழித்து வந்தோம்.
இத்தனைக்கும் குழந்தைகளின் பிறப்பில் எந்த நம்பிக்கை பிரச்சினையும் எங்களிடம் தலை தூக்கவில்லை. இவை இரண்டும் என் குழந்தைகளே என்பதில் இருவரும் வேறுபடும்படியான பேச்சின் சாயல் கூட இதுவரை வந்ததில்லை. இருவருடைய ஒழுக்கத்திலும் இருவருக்கும் எந்த நம்பிக்கை பிரச்சினையும் எழவில்லை. உறவாடி கெடுக்கும் எந்த நபரும் எங்கள் அருகில் வந்ததில்லை.
அவள் என்னை பிரிந்து போய் பத்து வருடங்கள் முழுதாக முடிந்து விட்ட நிலையில் எனது மனம் அசை போடும் அவளது நினைவுகளை இன்று வரை தடுக்க முடியவில்லை.
அவளின் நினைவாக எழும் எனது ஈர்ப்பு சிநதனைகள் தொடருகின்றன. எழுதிக்கொண்டே இருக்கிறேன்.