மரணத்தைத் தள்ளிப் போடும் கவிதை

இருளில் நடக்கிறேன்
இலக்குகள் கொண்டு
வெளிச்சம் இன்றியே
அகக்கண் வழிகாட்டல்
அகல்விளக்கு போல
அமைந்திடும் எனக்கு !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
துன்பங்களில் அமிழ்ந்து
துடிதுடிக்கும் நெஞ்சம்
துணையொன்றும் தேடாது
தூக்கிவிட எனக்குண்டு
துரத்தியடிக்கும் தைரியம்
துவண்டுவிட மாட்டேன் !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.>>>>
என் தேடல் என்னை
எங்கெங்கோ அழைத்திடும்
எதற்கும் அஞ்ச மாட்டேன்
ஏனெனில் கற்றலில்
ஏகப்பட்ட விருப்பம்
ஏறுநடை போடுவேன் !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சாட்டையடி தரும்
சமுதாயச் சாடல்கள்
சளைத்திட மாட்டேன்
பின்வாங்க மாட்டேன்
பிறப்புக்கொரு அர்த்தம்
பிடித்துப் போக வைப்பேன் !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தள்ளாட்டம் கண்டாலும்
தன் பிழைகள் ஏற்பேன்
தயங்கிட மாட்டேன்
வாழ்க்கை என் பார்வைக்கு
வளமான சோலை - எனக்கு
வாலிபம் தொடர்கதை !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
என்னைக் குத்தும் முள்ளும்
எனக்கு வலி தராது - மாறாக
என்னை வழிநடத்தும்
தட்டிக் கழித்துவிட்டு
எட்டிப் போயிருந்தால்
கிட்டிவிடுமா ஒரு பாடம் !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
போதும் என்று நினைக்க
ஒருபோதும் விருப்பமில்லை
திருநாட்கள் தினம்தினம்
மலரும் மலர்களின் உற்சாகமாய்
மனிதவாழ்வில் மகத்துவமாய்
மரணத்தையும் தள்ளிப்போடுவேன் !
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>