இதை காதலென்று சொல்லலாம்

------ இதை காதலென்று சொல்லலாம் -------

கல்லூரி பயில
காதல் கனவோடு
வரும் வாலிபர்களை
மௌனத்தால்
மண்டை பித்து பிடிக்க வைப்பவளே !

என் மின்னஞ்சல் மற்றும்
இன்னும் சில
ரகசியங்களின்
கடவு சொல்லாய்
ஒளிந்து கொண்டவளே!

சட்டைப்பைக்குள்
இளைப்பாறும் பேனாவை
இழுத்து வந்து
எழுத்து கவிதை
எடுத்து கொண்டவளே!

இணையதளத்தில்
இனி உன் முக சாயல் ஒத்த
பெண் புகைப்படம்
தேட வேண்டியிருக்கும்.

தெரிந்த தமிழை வைத்து
தெரியாத உனக்கு
கவிதை எழுதி
முகநூல் சுவரில்
ஓட்டுவதே இனியென்
ஒரே வேலை.

ஐந்து முற்றுபுள்ளி
கீழே
ஒரு ஆச்சரிய குறி
அடடா
உன் பாத சுவடு...

காதல் பூத்த
கணமெது?
ஆராய்ச்சி கூட
தவளை அறுக்கிறபோது
ஆலோசித்து கொள்கிறேன்.

ஆயுள்வரை
உனக்கு அடிமையாய் இருக்க
ஆசைபடுகிறேன்.
கடிதமெழுதி
கையில் கொடுத்தேன்
சேகுவேர படமிட்ட
சட்டையணிந்து.

புறநானூறு படித்து
புரட்டிய பக்கத்தின்
நடுவே
பொறுக்கியெடுத்த
உன் ஒரீரு பூவிதழை
வைத்துக் கொள்கிறேன்.

கணினி திரையில்
அங்குமிங்கும் ஓடும்
மின்னணு எலி
அம்புகுறி போல
என் விழி திரைக்குள்
உன் பிம்பம்.

அடம்பிடிக்கும் குழந்தை போல
எங்கு சென்றாலும்
உடன் கூட்டி செல்ல
வேண்டியிருக்கிறது
உன் நினைவுகளை.

புத்தனை தழுவ
போகிறபோது
மலர்களை பெய்கிறது
போதிமரம்.
துணிவில்லை
உன் மீதான ஆசையை
துறப்பதற்கு.....

மண்ணுக்குள் மக்க
மறுக்கும்
குவிந்த நெகுழி
குப்பைகள் போல
என் மனதெங்கிலும்
உன் காதல்

பொர்ணமி இருட்டு
பால் ஒளியில்
பின்னிக்கிடக்கும்
பாம்புகள் போல
உன் நகத் தீண்டலுக்கு
நரம்புகள்
அப்படித்தான்
நடந்து கொள்கிறது.

எதிரி எய்த அம்பு
என் நெஞ்சை கிழிக்க
வழியும் ரத்தம் தொட்டு
வரைய துவங்குகிறேன்
உன் உருவம்.

சீன களிமண்ணில்
செய்த பொம்மை
உனக்கு
பரிசளிக்க காத்திருக்கும்
பகல் பொழுதில்

எச்சில் கோப்பை கழுவி
சிறுவன் கொணர்ந்த
தேநீர் வாங்கி
நாலுமுறை
குடித்து விட்டேன்...
அச்சிறுவன் கல்வி குறித்து
சிந்தித்தேனா?
தெரியவில்லை.

---- தமிழ்தாசன் ----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (21-Oct-12, 2:36 am)
பார்வை : 221

மேலே