குடி கெடுத்த குடி

கால் கடுக்க நட நடந்து
கதிரறுத்து கலை புடுங்கி
வாங்கி வந்த கூலி இங்க
அர வயித்த கூட நிரப்பல

பித்திரமா பாத்துக்குவான்னு
பந்தியில சோறு வச்சு
பத்து பேரு முன்னால
கைபிடிச்சி குடுத்தாங்க
என் புருசன்கிட்ட

கழுத்து புருஷன் கருணையால
வயித்து புருஷன்
உலகம் பாக்க வந்து
வருஷம் பத்து பிறந்திருச்சி

யார பாத்து குடிச்சானோ
என்ன ருசி கண்டானோ
சுய நினைவ அடகு வச்சு
திரியிரானே குடிகாரனா
ஊருக்குள்ள

இன்னி வரைக்கும் காத்து வச்சு
மூணு கிரான் தாலி தங்கம்
நெஞ்சுக்குள்ள பத்திரமா
பூட்டி வச்சிருக்கேன்

வெள்ளி முதல் வெண்கலம்
பித்தளை வரை
சீதனமாய் கொண்டு வந்ததை
குடிச்சி அழிச்சி ஓச்சிப்புட்டான்

சொந்தமின்னு இருந்த சனம்
குடிகாரன்னு விலகி போக
நான் உழைச்சி நடக்குதுங்க
என் குடும்பம்

குடிச்ச குடி பத்தலன்னு
அந்தி மங்கும் நேரத்தில
மஞ்ச கயிற அறுத்துபுட்டு
மாங்கல்யம் பிடிங்கி சென்றான்
குடும்பத்தை கெடுத்து நின்ன
சாராயத்தை தேடிக்கிட்டு

தின்ன உப்பு கண்ணு வழி
கரைந்து வர
படபடத்து நெஞ்சு குழி
ஏறி இறங்க
கண்ணு இரண்டும் தேடியது
உத்திரத்தை

கயிறு எடுத்து முடிச்சி
போட்டு நிக்கையிலே
அம்மான்னு கத்திகிட்டு
ஓடி வந்து கட்டி நின்ன
பிள்ள முகம் பார்த்து
தூக்கி எறிஞ்சேன்
சாவு எண்ணத்தை

எனக்கு பின்னே எம் பிள்ளை
நிக்க கூடாது அனாதையான்னு

எழுதியவர் : Meenakshikannan (22-Oct-12, 2:44 pm)
பார்வை : 218

சிறந்த கவிதைகள்

மேலே