ஏமாற்றம் என் முடிவோ?
நான்பிறந்தேன் இந்த நாட்டினிலே ஒரு
வீட்டினிலே இன்பக் கூட்டினிலே
நீஎழுந்தாய் அந்த வானத்திலே வெகு
தூரத்திலே முகிலோரத்திலே
நான் நடந்தேன் அந்திநேரத்திலே நதி
யோரத்திலே மனச் சோகத்திலே
நீ பொழிந்தாய் ஒளி பால் நிலவே அந்த
நீலத்திரை விரிமேகத்திலே
வானத்திலே நினைக் காண்பதிலே வரும்
மோகத்தினால் இன்ப தேகத்திலே
கானத்திலே இழைராகத்திலே எழும்
போகத்தைத் தந்தவள் போனதெங்கே
மீனதிலே விழியானதென்றே துள்ளி
மூடும் இமைகளைத் தானுடையாள்
தேனதிலே குளித்தேகும் மொழிகளைத்
தூவும் அவளினைக் காணவில்லை
சோலை மலர்களும் தூங்கியதே தென்றல்
ஏங்கியதே மணம் வாங்கியதே
மாலைவெயில் மஞ்சள் ஆகிடவே
மலர்மீதினிலே வண்டு தூங்கியதே
பாலையிலே உள்ள நீரெனவே இவள்
பார்வையிலே வரவாகியதேன்
மேலையிலே ஒளி ஆதவனும் மேனி
மாழுவதாய் எண்ணம் போனதுமேன்?
காரிருளே சுற்றிக்காணலிலே அவள்
காதலிலேமனத் தேடலிலே
நீரிலினிலே உள்ளதானலையே எனும்
நேரழகில் மனமானதுவே
தேரினிலே வரும் தேவியென்றே அவள்
தீயெனவே யன்பை தூண்டியவள்
ஏரெனவே இரு மார்பெழுதும் இள
ஏந்திழையோ என்னை ஏய்த்ததுமேன்
தேனெனவே ஒளிப் பாலெனவே அலை
தோன்றியதே மின்னியாடியதே
மானெனவே துள்ளி ஓடியதே ஒரு
மங்கையென்றே நதி பொங்கிடவே
தண்ணிலவே உனை எண்ணியதோ ஒரு
அல்லிமலர்ந் துள்ளம் ஏங்கியதே
எண்ணமதி லுனை எண்ணியதோ பெரும்
ஏக்கத்திலே நீரிலாடியதே.
இன்பம்தருங்குளிர் வீசியதே
உடல் கூசியதே மெல்ல ஆடியதே
சின்னதென்றே இசை தென்றலிலே வந்து
தேனெனவே செவி பாய்ந்ததுவே
அன்பை இழந்தனோ நெஞ்சினிலே வந்து
பொங்கியதே இன்பம் உன்னொளியால்
நன்றிசொல உனைத்தேடிநின்றேன் அந்தோ
நாடி வந்த முகில் மூடியதேன்?
**************