ஒண்டிபுலி நன்னாரி சர்பத் !
மதுரை யில் வெற்றிலை பாக்கு கடையில் கண்ணாடி கிளாஸ்சில் மரக்கட்டையில் ஆனா பிழியில் , பாதி எலுமிச்சையை குப்புற வைத்து ஒரு நசுக்கு நசிக்கி, விதையை லாவகமாக வெளியில் வீசி ,அந்த கிளாஸ்சில் ஒண்டிபுலி நன்னாரி பாட்டில் இல் உள்ள அடர்ந்த சிகப்பு அல்லது எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் உள்ள அடர்த்தியான நன்னாரி சர்பத்தை ஊற்றி , சின்ன ஸ்பூன் கரண்டியால் டக டக டக என கலக்கி கட்டை விரலாலும் ஆட்காட்டி விரலாலும் தூக்கி பிடித்து நம் கையில் தரும் போது , நம் உதடுகள் தவிக்கும் , விரல்கள் நடுங்கும் .முதல் வாய் சர்பத் உள்ளே இறங்கியுடன் கிடைக்கும் சுகமே தனி . நடுவில் சில நேரங்களில் வாயில் அகப்படும் சிறிய எலுமிச்சை விதைகளை சடக்கென்று லாவக மாக துப்பி விட்டு , அடுத்த மடக்கு என்று , நிமிடத்தில் காலியாகி விடும் .இன்னும் கொஞ்சம் இல்லையே என்ற ஏக்கம் பிறக்கும் . மதுரை வெயிலுக்கு மிக இதமாக இருக்கும் .அந்த கடையை சுற்றி அந்த நன்னாரி,எலுமிச்சை நறுமணமும் கூடவே வெற்றிலை,பாக்கு,புகையிலை உடன் வாழை பழத்தின் வாசனையும் ,சிகரெட்டு நறுமணமும் சேர்ந்து கிறங்கடிக்கும் . இப்போது நினைத்து பாருங்களேன் அந்த நன்னாரி பாட்டிலையும் , அந்த பாயும் ஒற்றை புலி லேபிளையும் . மதுரையில் பழைய சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட், (கட்ட பொம்மன் சிலை அருகில் ) இருந்த அந்த வெற்றிலை பாக்கு கடைகள் மறக்க முடியாதவை .