தருமம்
தருமம் என்பது தலையைக் காப்பது
கருமம் என்பதோ செயலை குறிப்பது;
தருமமும் கருமமும் இணை கோடுகளோ
தருக்கம் வேண்டாம் தருமம் செய்வீர்!.
அருமை தெரிந்து செய்வதே தருமம் ஒரு
பொருளின் உட்பொருளே தருமம் --செய்யும்
கருமமோ வாழ்வின் எஞ்சிய பயனாம்
தருமத்தின் ஆதார வித்து கருமம்.
நெருப்பின் தருமம் எரிந்து முடிதல் -அந்த
நெருப்பினை அணைப்பதே நீரின் தருமம்;
துரத்திப் பிடிப்பதே சிங்கத்தின் தருமம்,
தப்பிப் பிழைப்பதே மானுக்கு தருமம்.
தனிமை தவிர்த்து வாழும் மனிதன்
இனிமை தேடி செய்வதே கருமம்;
தனி மனிதர்க்குத் தருமம் புனிதம்,
மனிதர் சேர்ந்து வசிப்பதும் உசிதம்.
மாணவர் தருமம் அறிவு விருத்தி - அதை
சாணை பிடித்தலே குருவின் தருமம்;
உழைத்துப் பிழைத்தலே உழைப்பவர் தருமம்;
அழைப்பின்றி உதவுதல் மனித தருமம்.
கொழுநன் தருமம் கொண்டவளைப் பேணல்,
யோகியின் தருமம் யோகப் பயிற்சி;
தோட்டிக்குத் தருமம் கழிவு அகற்றல்
ஏட்டியோ போட்டியோ தருமத்தில் இல்லை.
அரிய தருமம் ஆசிரியர் செயல் - மிகச்
சிறிய தருமம் சிங்கத்தின் பசியென
தருமத்தில் உயர்வு தாழ்வுகள் இல்லை
சரியென நோக்கின் சரிவுகள் இல்லை
கலங்கி நின்றிட்ட அண்ணனை வெறுத்து
இலங்கை வென்றிட்ட இராமனைச் சேர்ந்த
விபீடனன் செயல் அது தருமந்தானோ,
ஐயம் உண்டு நம் அனைவர்க்கும் இதிலே.
சரியானவனல்ல என தெளிந்து ஒதுக்கிய
துரியனின் பக்கலில் சேர்ந்து வீழ்ந்திட்ட
பிதாமகர் செயல் தருமமோ சொல்வீர்
அதாவது அவர் செய்தது தருமமோ?
அதருமம் என்றே அனைவரும் இயம்புவர்;
கதறிடக் கதறிட செய்தார் பாவம் - ஆனால்
இல்லை அதுவும் தருமம் புனிதம் என
நல்லோர் அறிஞர் பலரும் கூறுவர்.
”தருமம் அனைத்தையும் காற்றினில் விட்டு
அடைக்கலம் என்னுள் ஆகனும்” என்றும்,
”கருமமப் பயனை விடுதலை செய்து
பரமனைச் சேர செய்வன் நானே”
பறைசாற்றுது கீதை, பார்த்தனின் வேதம்,
“கறைகள் நீங்கிட கலக்கம் வேண்டாம்
சிறைகளை உடைத்து சீரகம் சேர”
மறையதன் பொருளை உணர்வோம் நாமே.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
