முழுதாய் நான் உணர்ந்திட்ட அப்பா...!

அப்பாவின் அரிச்சுவடியில்..
அம்மாவின் கண்ணசைப்பு
மொழிகள் அத்தனைக்கும்
அர்த்தம் இருக்கும்...!
இசைதலும் புரிதலுமாய்
அழகான இல்லறக்கூட்டினை
காத்து நிற்கும் இல்லாளன்...!
தன் துணைவியின் நேசத்தை
தாண்டிய சிந்தனைக்குள்
வேறேதும் நிறுத்திவிடாதவர்...!
இன்பங்கள் துன்பங்கள் யாவும்
தாண்டிய அப்பாவின் கம்பீரம்
குலைந்ததெல்லாம் அம்மா
தவறிய நாளின் இரவின் இருளில்,
சிலநிமிட விசும்பல்களில்..!
எத்தனை பரிசுத்தமான கண்ணீர்த்துளி அது...!
அவரின் கண்ணோரம் கசிந்து இருந்த ஈரம்..!
நான் கவனித்திடக்கூடாதென சட்டென்று
துடைத்து விட்ட நேரம்...!
ஆண்மையின் இலக்கணவாசனை...! அப்பா...!
மழலை மொழியில்“அம்மா”வென முதல் வார்த்தை
மிழற்றிய போது தாளாத இன்பத்தில்
தாயுமானவராய் என்னை நெஞ்சின் மேல்
கர்ப்பமாய்ச்சுமந்தவர்...!
செல்ல மகளின் இடுப்பில்
அரைஞாண் கயிறு பூட்டி..!
கன்னத்தில் கருமை தீட்டிட்டு...
கிச்சு கிச்சு மூட்டி
புளங்காகிதம் அடைந்த மீசை வைத்த குழந்தை அவர்...!
முதலடி எடுத்து வைத்து
நடைப் பழக தடுமாறி தத்தளித்த போது
சுட்டு விரல் கொடுத்து இரண்டடி தொட்டதும்
வாரியணைத்து முத்தமிட்ட அன்பு அப்பா...!
இவரது செல்ல முத்தங்களும்
அவசிய கண்டிப்புமாய்...
உப்பு மூட்டை தூக்கிய நாட்களெல்லாம்
இன்னமும் நீண்டுக் கொண்டேதானிருக்கின்றன...!
காரணங்கள் தான் மாறிப்போயிருந்தன..!
காட்சிகள் மாறவில்லை..! அப்பா எப்போதுமே
என் ஹீரோதான் எனச் சொல்லுவோரிடம்..!
நான் எதுவுமே சொல்வதில்லை..!
ஏனென்றால்...
எனக்கு எல்லாமுமே அப்பாவாகிப்போனதால்...!