தொலைந்ததை தேடி....

தனியாகவே சென்று கொண்டிருக்கிறேன்
மனம் ஏனோ தொலை தூர பயணம் செய்கிறது...
எங்கிருந்தோ ஒரு வெறுமை
இரத்தம் வெளியேற்றி உள்புக பார்க்கிறது...

காற்றின் மெல்லிய ஈரப்பதத்தினூடே
சுவாசம் தொலைத்த மூடு பனியாய் நான்...
தடதடக்கும் ரெயில் வண்டியின்
படபடக்கும் தண்டவாளமாய் நான்...

எதை நோக்கி செல்கிறேன்? தெரியவில்லை
எதற்க்காக செல்கிறேன்? தெரியவில்லை
என்ன வேண்டும் எனக்கு? தெரியவில்லை
என்ன இல்லை எனக்கு? தெரியவில்லை

தூரத்தில் ஒரு மின்விளக்கோ
இதோ அணைய போகிறேன் என்றது...
பக்கம் வந்த மின்மினியோ
விடாதே முயன்று பார் என்றது

ஆயாசமாய் அண்ணாந்தேன்
விண்மீன் கூட்டங்கள் கண்சிமிட்டின
நீந்துகின்ற மேகக்கூட்டங்கள்
என்னிடமோ கண்ணாமூச்சி விளையாடின...

பொழிந்து விட்ட மழையின் தூறலில்
உயிர்பிக்க துடிக்கும் விதையாய் நான்...
பூமி தாயின் மடி பிளந்து
ஆங்காரமாய் மீண்டும் நானே நான்...

எழுதியவர் : ஜி.டி (17-Nov-12, 2:50 am)
பார்வை : 1261

மேலே