அணையாதோ?

( அன்பு)
திங்கள்தனை முகிலணைக்கும்
தீந்தமிழைக் கவியணைக்கும்
மங்குமிருள் இரவணைக்கும்
மாலைதடந் தோளணைக்கும்
பொங்குகட லலையணைக்கும்
பூவிழியை இமையணைக்கும்
எங்குமுயிர் அன்பணைந்தால்
இதயமகிழ் வெய்தாதோ

பொங்குமொளி பயிரணைக்கும்
பூத்தகொடி மரமணைக்கும்
பங்கயத்தை நீரணைக்கும்
பனித்துளியைப் புல்லணைக்கும்
செங்கரும்பின் சாறுஇனிக்கும்
சேர்ந்தசுவை நாவணைக்கும்
பங்குகொளும் வாழ்வுதனில்
பண்பைமனம் அணைக்காதோ

காலையொளி புவியணைக்கக்
கனவுவெழுந்து துயிலணைக்கும்
ஓலை மறை வெடுநிலவை
உள்ளமதன் உணர்வணைக்கும்
சோலைவருங் காற்றலைந்து
சொல்லாம லுடலணைக்கும்
ஞாலமதில் அன்பெழுந்து
நம்வாழ்வை அணைக்காதோ

( அழிவு)
கங்குல்வரப் பகலணையும்
காற்றெழுந்து சுடரணைக்கும்
பொங்கும்சினம் அறிவணைக்கும்
போதைகொளப் புகழணையும்
அங்கமெங்கும் நோயணைக்க
ஆனந்தமென் உணர்வணையும்
தங்குமிந்தப் புவிவாழ்வில்
தவிப்பென்ப தணையாதோ

சேலையணி மாதரது
சேல்விழிகள் நீரணைக்கும்
நாலுமறி மதிஅறிஞர்
ஞாபகத்தை வயதணைக்கும்
மேலுமுயிர் வாழுடலை
மோகமுடன் விதியணைக்கும்
காலமெனும் சக்கரத்தில்
கனவெனவாழ் வணைவதுமேன்

எழுதியவர் : கிரிகாசன் (17-Nov-12, 1:26 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 121

மேலே