அவன் எனக்கான ராஜகுமாரன்

கொச்சிக்கு அருகிலே ஒரு சிறிய அழகிய பீச். செராய் பீச். மிகவும் தனிமை வாய்ந்தது. சீசனில் அலைகள் அளவுடன் அலையலையாய் கரைதொடும் கடல்கொண்டது. கடவுளின் நாடு என்பதால் பகலில்கூட வெறுப்பேற்றும் வெயிலில்லை. மீன்பிடித்து கரைக்குவரும் படகுகளின் கூட்டமும் ஒரு கண்கொள்ளாக்காட்சி.
எங்களின் மூன்றுநாள் கல்லூரி விடுமுறைக்கு நாங்கள் தேர்ந்தெடுத்தது அங்குதான். பெண்களாக பத்துப்பேர் ஒருவேனெடுத்து, தலைமைக்கு எங்களின் தோழியின் அப்பாவையும் அம்மாவையும் துணைகொண்டு சென்றிருந்தோம். கொச்சினில் தங்கியிருந்து அங்கு எல்லாம் சுற்றிப்பார்த்து முடித்து கடைசி நாள் காலையில் செராய் வந்திருந்தோம்.
கடலில் இறங்கிக் குளித்துக்கொண்டிருக்கும்வேளை இரு வாலிபர்கள் எங்களின் அருகில் குளித்துக்கொண்டிருந்தனர். ஒருவனுக்கு நல்ல அகண்ட மார்பு. லாவகமான நீச்சலில் குளித்தான். சிலநேரங்களில் கடலின்மேல் மிதந்தான். கன்னியாகுமரிக்கடலைச் சேர்ந்தவன்போலும், கட்டான உடல், அவன் கைக்குள் கடல். கனவுனாயகன்போல கச்சிதமாகவே இருந்தான். ஒருநிமிடத்தில் மனதை அள்ளிக்கொண்டான். அவனைக் காண்பதிலேயே என்மனம் ஈடுபாடாய்க் கிடந்தது. மிகவும் சிறிய அரைக்கால் டிராயர் அணிந்திருந்தான். சிக்ஸ்பேக் தோள்கள். நிச்சயமாக ஜிம்முக்கு செல்பவன் என்பதை அவனின் பருத்த கால்கள் உணர்த்தின. நாங்கள் எல்லோரும் திரும்பிச் செல்லும் அலைகளின் சுழலில்கூட இயைந்து நிற்க முடியாமல், உருண்டுகொண்டுதான் குளித்தோம். சிலநேரங்களில் அந்த ஈரத்தில் அங்கங்களின் அத்தனை அடையாளங்களும், கூசும் உதையசூரியன்போல் வெளிவிழுந்து, பெண்ணை உறுதிப்படுத்தி நின்றன. அவன் யாரையுமே கண்டுகொள்ளவில்லை. அது எனக்கு கொஞ்சமேனும் கோபமாகவே இருந்தது. இளம் பத்து பெண்களுக்கும் நேர்ந்த ஒரு குறைபோலவே உணரமுடிந்தது. என்தொழியிடம் கூறினேன். அவனை உன்னைப் பார்க்கவைக்கவா? என்று சொல்லிக்கொண்டே, என்னையும் இழுத்துக்கொண்டு கொஞ்சம் கடலினுள் சென்றாள். பயமாக இருந்திடினும் பிடித்திருந்தது. அவனுக்கு மிக அருகில் சென்றுவிட்டோம். திடீரென அவள் என்னைவிட்டுவிட்டு திரும்பிவிட்டாள். கழுத்துவரையான கடலினுள் கத்திவிட்டேன், நான். இப்பொழுது அவன் என்னைக்கண்ட பின் என்பக்கமாகப் பாய்ந்து என்கைகளைப் பிடித்து இழுத்து இடையில் கைவளைத்து அப்படியே கரைக்கு இழுத்தான். ஒரு பெரிய அலை எங்களை அப்படியே புரட்டி எடுத்துக் கரை சேர்த்தது. பட்ட இடங்களில் வலி மறைத்து வதனம் இனித்தது. கடலைக் கொஞ்சம் குடித்து கண்கள் சிவந்தது. சிவப்பு அவனாலா இல்லை உப்பின் உறுத்தலா என்பதினை பிரித்துணர முடியவில்லை.
நன்னீரில் குளித்து உடைமாற்றி உணவருந்த அமர்ந்தோம். அவனும் உணவுக்கு அங்கேயேதான் வந்துசேர்ந்தான். அல்லது அவன் செல்லும் இடத்திற்கு நாங்களும் சென்றிருப்போம். அவனின் மேசைக்குச் சென்று எங்களை அறிமுகம் செய்துகொண்டு அவனுடனேயே அமர்ந்து நன்றி தெரிவித்தோம். கொஞ்சம் அரட்டையடித்தோம். குமரியைச் சேர்ந்தவன். நாங்கள் நெல்லை. ire இல் வேலை பார்க்கிறான். அழகாகவே பேசினான். தீர்க்கமானது அவனின் பார்வை. மிலிட்டரி செல்ல எத்தனித்து குடும்பத்திற்காக விட்டுக்கொடுத்தவன். மெக்கானிகல் எஞ்சினியர். என்மனம் அவனை ஆட்கொள்ளத் துடித்தது. பெண்ணுக்கே உரிய ஆணவம் வேலைசெய்யத் துவங்கியது. காதல் அரும்பியது. அவனின் செல்போனை அழைத்து நம்பர்களைப் பதிந்துகொண்டோம்.
ஊர் திரும்பிய அன்றைய இரவே அவனின் செல்லில் அவனையழைத்து என்காதலை வெளிப்படுத்தினேன். அவனோ நட்புவிரும்பி, நட்பு பாராட்டி நண்பனானான். விடமாட்டேன் அவனை. அவன் எனக்கானவன், என் ராஜகுமாரன்.

எழுதியவர் : தீ (17-Nov-12, 1:32 pm)
பார்வை : 526

மேலே