விண்மீன்கள்
ஆழக் கடலில் நீந்தும் மீன்களை
அள்ளிப்பிடித்திட முடிகிறது!
வானக் கடலில் நீந்தும் உங்களை
வசமாய்ப் பிடித்திட முடிவதில்லை!
இரவு முழுதும் முயன்று பார்த்தும்
எந்தன் கைகளில் சிக்கவில்லை !
ஏக்கத்துடனே எழுதிய எந்தன்
கவிதையில் வந்து மாட்டிக் கொண்டாய்!
இரவில் உங்கள் வித்தையைக் காட்டிக்
குறும்பு செய்யும் நீங்கள் எல்லாம்,
பகலில் எங்கு செல்வீர் என்று
படைத்தவனுக்கும் தெரிவதில்லை!
காற்று வெளியினில் கண்களைச் சிமிட்டிக்
கண்ணடிக்கும் மாணவன் போல்
சேட்டைகள் பலவும் செய்தே வானில்
சேர்ந்து திரிவீர் நண்பர்களாய்!
வானத்தாயின் நீலப் புடவையின்
அழகிய சரிகை வேலைகளா?
ஆங்காங்கே அதில் விழுந்த
அழகைக் கெடுக்கும் ஓட்டைகளா
பால் போல் ஒளிரும் நிலவொளியில்
பார்ப்பவர் கண்களைப் பறித்திடுவீர்!
பகலவனின் பார்வை பட்டால்
பஞ்சு பஞ்சாய்ப் பறந்திடுவீர்!
எல்லா வகையிலும் ஏற்றம் பெற்ற
நட்சத்திரமே!
உங்கள் அழகைகாணும் அருமை என்றும்
விசித்திரமே!