மரணிக்கும் நாளைய சூரியன்

எவருடையதோ
இடுப்பில் குந்திக்கொண்டு
பணம் தேடும் மூலதனமாகி
பசி பட்டினியோடு வாடும் பூ

சுரக்கும் பால் புகட்ட
மழலை இன்றி
தாயின் மார்பு
வேதனையில் துடிக்க
இரக்கம் அதை மறந்த
அரக்கியர் கைகளில்
அணுவணுவாய் சாகும்

நேரத்திற்கொரு
தாய் மடியில் தவழும்
இம்மழலை இதழ்கள்
புன்னகை சிந்தினாலும்
கண்ணீரை நேசிக்கும்
காதகிகள் கருணை இன்றி
கண்ணீரை பரிசாகக
காரணமின்றியே கதறிக் குமுறும்

சமிக்ஞை விளக்குகளின்
சிகப்பு வண்ணங்களில்
பிரகாசமாகும்
யாசகிகள் யாசகத்திற்காய்
சூசகமாய் கிள்ளிவிட்டு
யாத்திரிகளிடம் கையேந்தும்போது
புரிவதில்லை இந்த குழந்தைக்கு
தான் அழுவது
வியாபாரத்திற்காய் என்று.

மனித உருவில்
அரக்கம் படைத்து
மனதுள் இரக்கம் நுழைந்துவிடாமல்
மதில் கட்டி மிருகமாகிபோன
மானுட ஜந்துக்கள்
குழந்தைக் கடத்தி செய்யும்
கொடூர அவதாரத்திற்கு போடும்
கொடிய தாய் வேஷம்
உலகில் மிக கொடியாதாய் போனதால்

இலட்சணங்களோடு பிறந்தாலும்
ஊனமாக்கபடும் வேளை
மரணிக்கப்படுகின்றது இந்த
நாளைய சூரியன்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Nov-12, 4:11 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 111

மேலே