மனதின் பன்முகம்
எண்ண அலைகள் பொங்கித் ததும்பும் பரவை நீ!
வண்ணச்சிறகுகள் விரித்துப் பறக்கும்
பறவை நீ!
திண்ணமான முடிவுகட்குத் தடையாகும் நந்தி நீ!
விண்ணிடை மேகம் போல நிலைத்தலில்லா மந்தி நீ!
எத்தனை இட்டு நிரப்பினாலும்
நிறைவடையா மாயப்பாத்திரம் நீ!
மெத்தப்படித்த மாந்தர் கூட
கற்க முடியா சாத்திரம் நீ!
கத்தி போன்ற ஆயுதங்களாலும்
அழிக்க முடியா அசுரன் நீ!
சித்தம் ஒடுங்கி யோகம் செய்தால்
அமைதி இலங்கும் ஆழ்கடல் நீ!
சிட்டாய் காலங்கடந்து பறக்கவல்ல
மாயக்காரன் நீ!
எட்டா இடங்களும்சென்று வாழவல்ல
வித்தைக்காரன் நீ!
தட்டுத்தடுமாறி தறிகெட்டலையும்
பித்துக்குளியும் நீ!
பட்டுத்தெரிந்த அனுபவங்களாலே
தத்துவஞானியும் நீ!
கன்னல் மிக்க மதலைமொழியில்
மயங்கிப்போகும் பொன்வண்டு நீ!
வன்சொல் துரோகம் வாட்டி வதைத்தால்
வாடித் துவளும் மென்கொடி நீ!
என்பு தோல் போர்த்திய உடலின் ஒளிக்கு
மூலாதாரக் கங்குல் நீ!
அன்பால் நிறைந்தால் குழைஅணி ஈசன்
வாழ விழையும் ஆலயம் நீ!