தொல்லை இல்லா வாழ்வு

தொல்லையே இல்லா வாழ்வு
தொலை தூரம் கிடைக்குமென்று
தெரிந்தவர் சொன்னது கேட்டு
திரும்பாமல் நடந்து பார்த்தேன்

கொடும் பசி வந்த போதும்
கோதையை இழந்த போதும்
கடும் பிணி தந்த போதும்
கனவுகள் கரைந்த போதும்

ஏமாற்றப் பட்ட போதும்
ஏளனம் கேட்ட போதும்
பாமரர் படும் துயரெல்லாம்
படுமனம் சுட்ட போதும்

தொல்லை என் வாழ்வை மட்டும்
தொடர்வதாய் எண்ணிப் பார்த்தேன்
மானுடம் பேசக் கேட்டால்
மனக் குறை நிறையப் பார்த்தேன்

மறுத்தாலும் அது போகாது
மறைத்தாலும் நிம்மதி ஏது
மண்ணிலே பிறந்தவர்க்கெல்லாம்
மனக் குறை வாழ்வின் கேடு

கீழ்வானம் தொடவே எண்ணி
கிழக்கிலே நடப்பதைப் போல்
வாழ்விலே தொல்லை நீக்க
வழி இல்லை என்பது உண்மை

தொல்லைகள் வாழ்வின் பகுதி
சந்திக்க மனதில் உறுதி
கொண்டாலோ நெஞ்சில் ஓரம்
குறையுமே கொஞ்சம் பாரம்

எழுதியவர் : நா.குமார் (19-Nov-12, 3:06 pm)
பார்வை : 299

மேலே