உதிர வைத்த மலர்கள்! 2/2

(தொடர்ச்சி.......)

3 . துயரின் கொடுமை...

நீர்த்திரை பாய்ந்து விழிவழிய - சிறு
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீற அமைதியுடன் - அங்கே
வார்த்தை கனல்கொள்ள வாயுரைத்தாள்
பார்த்தவர் போற்றும்நல் வாழ்வுதனும் - ஒரு
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்தமணியாரம் போலிருந்த - எங்கள்
கோபுர வாழ்வு குலைந்த தய்யோ

அன்னைபோன தெங்கு நானறியேன் - வாடும்
அன்புதந்தை சிறைக் கூடறியேன்
பின்னை பிறந்திட்ட தங்கையவள் - எங்கும்
உள்ளனளோ செத்துபோயினளோ?
என்ன செய்தோம் பிழை நாமும் இங்கே - இன்று
ஏன் பிரிந்தே தனிவாடுகின்றோம்
பென்னம்பெரியது இவ்வுலகம் - இந்தப்
பிஞ்சுமனம்காக்க யாருமில்லை

வீதியில் கொல்ல ஒருவன் வந்தால் - அங்கு
வெட்டுவோன் கத்தியை ஓங்கிஒரு
காதுவரை கொண்டு போகும்வரை - அதைக்
கண்டும் பொறுத்திரு என்பதுவோ?
நீதியாமோ கொலை நேருமென்று - உண்மை
நெஞ்சம் அறிந்தும் பொறுப்பதுவோ
பாதி கழுத்தினை வெட்டும்வரை - ஒரு
பாவமில்லையென்று பேசுவதோ

எத்தனைபேர் ஒன்றாய் கத்திநின்றோம்- மனம்
ஏங்கிக்கதறி அலறி நின்றோம்
செத்துஅழிந்து சிதறவிட்டு - வெறும்
சிற்பமென சிலையாகி நின்றார்
மொத்தமும் அழிந்து போனதய்யோ - அவர்
மௌனம்கொலை துணைஆனதன்றோ
உத்தமரை கொடுங்கோலரசு - பல
ஒன்றாயிணைந்து அழித்ததன்றோ

கீறி கழுத்து சிதையவெட்டி - இனம்
கீழேகிடந்து துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று - இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்?
போன அன்னைஉயிர் வந்திடுமோ - ஒரு
புத்துடல் தந்தை எடுப்பதுண்டோ
ஆனதெல்லாம் எழுந்து வந்து - எங்கள்
அன்பெனும் வாழ்வு திரும்பிடுமோ

ஏன் உலகெங்களின் கண்ணீரையும் - பல
ஏழைகதறிய கூக்குரலும்
வானில் கரைந்து அழியவிட்டு - அன்று
வாளாதிருந்து மனம் பொறுத்தார்
கானலென் நீரினைக் கண்டதொரு - புள்ளி
மானுமுயிர்தப்ப எண்ணியதாய்
வீணில் கரம்கூப்பி நின்றோமன்றோ - புவி
வேடிக்கையல்வோ பார்த்துநின்றார்

கூறி அழுதிட்டு நின்றவளாம் - அவள்
கோலமதைக் கண்டு சொல்லறியா
ஆறிமனம்கொள்ளு மட்டுமவள் -சிறு
பூமுகம்கண்டு பொறுமைகொண்டேன்
மாறும் விதிஒருநாளிலம்மா- நல்ல
மங்கலமானதோர் வாழ்வுவரும்
தேறித்திடம் மனம் கொள்ளுஇனி -அந்த
தெய்வம் இருக்குது கேட்குமென்றேன்

நீசர்கள் ஆட்சி நொருங்கிடணும் - அந்த
நேர்மையற்றோர் முடி சாய்ந்திடணும்
தேசமனைத்திலும் நீதி நெறி - அன்பு
தேர்ந்தவர் ஆட்சி புரிந்திடணும்
நாசமிழைபவர் கையில் இந்த - முழு
நானிலமும் உள்ளமட்டிலொரு
பூமியல்லஇது வேறு ஒன்று, - வெறும்
பேய்கள் விளையாடும் பந்து என்றாள்

கூறிவிடை பெற்று நான்திரும்பி - கனம்
கொண்ட மனதுடன் வீதிவந்தேன்
மாறித்தெரிந்தது இவ்வுலகம் - பெரும்
மாமரங்கள் தலையாட்டி நிற்க
பேயெனசீறிடும் சாலைவண்டி - பெரும்
பீதியெழும் சுழல்காற்றின் சத்தம்
காயுமுடல்சுட்டுவேகும்வெயில் - இவை
கண்டுவிரைந்து நடந்து சென்றேன்

*****************

எழுதியவர் : கிரிகாசன் (21-Nov-12, 2:05 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 94

மேலே