அழுகை

ஓரிடத்தில் யாரோ
பிறக்கிறார்கள்
மற்றோரிடத்தில்
யாரோ இறக்கிறார்கள்.

இவீரிடத்திலும்
அழுகையின் சத்தம்!

ஒவ்வொரு வீட்டிலும்
அழுகைப் பிறக்கிறது
அல்லது இறக்கிறது.

தெரியாத இடம் நோக்கும்
முதல் பயணத்தில்
அழுகை பொதுவாகிறது......

வாயில் கைவைத்து
அழுவது தான்
வந்தவனுக்கும்
போறவனுக்கும்
அறிமுகக் குறியீடு!

எனக்கு அழுகையை
பார்க்கும் போதெல்லாம்
அருவியின் நினைவே
அறிமுகமாகிறது.

இரண்டும் மேலிருந்தே
கீழிறங்கும்.

அறிமுகங்கள் என்றும்
நாம் அறிந்தது போலவே
இருப்பதில்லை,

அருவியையும்
அழுகையையும் போல,

கண்ணீர்கள் எப்பொழுதும்
குளிர்வதில்லை
காட்டருவி என்றுமே
சுடுவதில்லை,

இருந்தும்.....
இரண்டும் மேலிருந்தே
கீழிறங்குகிறது.

பிறர், அழுகையிலே
யாரோ தப்பிக்கிறார்கள்
யாரோ,செய்த
தவறையெல்லாம்
ஒப்பிக்கிறார்கள்.

அழுபவர்கள்
வெவ்வேராயிருந்தும்
அழுகை பொதுவாகவே
இருக்கிறது.



ஆனால்
அழுபவன் என்றும்
தனக்காய் அழுவதாய்
கூறுவதில்லை,

அவன் பிறர் கைக்காட்டி
பிறப்பவன், பிறர்
கைநீட்டி இறப்பவன்,

ஆனால் அழுகைகள்
அப்படியல்ல,அவை
என்றும் பொதுவானவை
யாரழுதாலும்.....

எழுதியவர் : அசுரா (21-Nov-12, 4:07 pm)
பார்வை : 233

மேலே