உதிர வைத்த மலர்கள்! 1/2

//கீறி கழுத்து சிதையவெட்டி இனம்
கீழேகிடந்து துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்? //

உதிர வைத்த மலர்கள்

1. இனியகாலைப்பொழுது

காலை மலர்ந்திடும் பூவை மணந்தொரு
காற்றுஎழுந் தோடிப்போகும்
நீல வானவெளி நீந்துமொளிச்சிறு
தாரகைகள் விடைகூறும்
வேல்விழி மாதரோ வாசலிருந்து கை
கொண்டவளையல்குலுங்க
கோல வண்ணமிட்ட தானஅழகைப்
பொறாமைவிழி கொண்டுநோக்கி

கீழத்திசைஅடி வானும் சிவந்திட்ட
ஜாலவண்ணங் களைப்பூசி
கோலமென்றே சிறுபிள்ளையைப் போலேதோ
கீறியழித்து கிடந்தான்
ஆழச்சிவந்திட்ட கோபத் திசையினில்
புள்ளியென்றோர் பட்சிக் கூட்டம்
நீலம் சிவந்தது எப்படி என்றுதான்
காணப் பறந்ததைக் கண்டேன்

காரிருள் கட்டியணைக்கப் புவிமகள்
வாழ்விருண்டு போனதென்று
பேரொளி வான்சுடர் பொல்லாச் சினமெடுத்
தே யொளி கொண்டதைத்தேட
வாரியடித் தெழுந்தோடி இருள்வாசல்
மூலைக் கதவடி சந்து
ஆலமரத்தடி சோலை நிழலெங்கும்
நாடி அடைக்கலம்கோர

மெல்லஒளி விரிந்தேகும் பொழுதினில்
உள்ளம் களித்திட நானும்
செல்லுமிடம் அறியாமல் பசும் புல்லில்
சின்ன நடை கொண்டு சென்றேன்
வெள்ளை மலர்களின் கூட்டம் பசுந்தரை
வீழும் பனித்துளி தூங்கி
துள்ளும் கயல்விழி மங்கையின் புன்னகை
போல எழில் தரக்கண்டேன்

மாடுகள் பூட்டிய வண்டி மெல்லஅசைந்
தோடின தாளங்கள்தட்டி
பேடுகளைக் கிளைசேர்ந்து கொஞ்சிப்பேசிக்
கொள்ளும்குருவிகள் சுற்றி
ஆடுமிலைகளின் சத்தம் அணைந்திடும்
காலைக்குளிர் காற்றின் முத்தம்
கூவிடும் சேவலும்பின்னே குரைத்தோடும்
நாயதும்கண்டு நடந்தேன்

ஆகப் புதுமைக ளேதுமற்றஒரு
காலைவிடிய லைக்கண்டு
தேகம்சிலிர்த்து மண்மீது அடிபதித்
தோடிநடந் திட்டபோது
மேகம்மறை நிலவாக ஒளிகுன்றிக்
காணும் முகங்களைக் கொண்ட
சோகமலர்கள் செறிந்து குவிந்திட்ட
ஏதிலிகள்இல்லம்கண்டேன்

கண்களில் நீருடன்காய்ந்த முகங்களில்
வாழ்வையிழந்த துயரம்
மண்களில்மூடிய உண்மைகளை இன்னும்
சீரணிக்காத பருவம்
பெண்கள்நின் றாடிடும்பக்கம் நெருங்கிப்
பிள்ளைகளே இங்கு வாரீர்
வண்ணத்துப்பூச்சிகாள் வைத்தபெயர்உம
தென்னென்றுகூறுவீ ரென்றேன்

2..பறித்துப் போட்ட மலர்கள்

தமிழினி என்பெயரென்றாள் - கலை
வாணி என்றோர் குரல் பின்னால்
கயல்விழி என்றாள் ஒருத்தி - வேறு
கனிமொழி தேன்மொழி யென்றே
அழகு தமிழ்ப்பெயர் கொண்டு- அவர்
அன்புமுகமோ மருண்டு
மொழியால் அழிந்தொரு கூட்டம் - என்
முன்னே இருந்திடக் கண்டேன்

பழியிங்கு யாரிடம் சொல்வேன் -சொல்லப்
பலகதை நூறென உண்டு
விழிமீது வழிகின்ற நீரைத் - தம்
விதியெனக் கொண்டவர் நோக்கி
அழகிய செல்லங்காள் உங்கள் - இரு
அன்புக்கரம் நீட்டிக் கொள்ளும்
பழமுடன் சுவைபண்டமுண்டு - இனிப்
பசிபோக உண்ணலாம் என்றேன்

குழல்சீவிப் பின்னலுமிட்டு - விழி
கொண்டநீர் சொட்டியீர் கன்னம்
வழிந்திட ஓர்சின்னப் பெண்ணோ - மிக
வேதனை கொண்டங்கு சொன்னாள்
பழமோ இனிப்பதுமில்லை -ஓர்
பசியென்ற எண்ணமுமில்லை
வளமான வாழ்வழிந்தோமே -இனி
அழவேண்டும் அதுபோதும் என்றாள்

பேச்சின்றி நான் சிலையாக- அந்தப்
பேதையோ இன்னமும் சொன்னாள்
போர்ச்சினம் கொண்டவரீந்த -பல
பொன்போற் பரிசுகள் பெற்றோம்
ஆட்சிக் கொடுமைகளாலே - செத்தே
ஆடும் பிணமென்று ஆனோம்
வாழ்க்கையே போனபின்னாலே - உயிர்
வாழுதல் வேதனை என்றாள்

(பகுதி 2 பார்க்க)

எழுதியவர் : கிரிகாசன் (21-Nov-12, 1:52 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 91

மேலே