பிறந்தநாள்
இன்று பிறந்தநாள்!
பரபரப்புடன் புலர்ந்தது காலை!
யார்யார் வருவர்?
என்னென்ன கிடைக்கும் என
குறுகுறுத்தது மனம்!
சுறுசுறுப்பாய் நகர்ந்தது நேரம்!
மகிழ்வலைகளால் நிரம்பியது இல்லம்!
இதோ கொண்டாடும் வேளை வந்துவிட்டது!
மனதுள் ஆவல் மொட்டு விட்டது!
கண்கவர் பட்டாடை,
கழுத்தில் ஆரம்,
காதில் ஜிமிக்கி,
அழகுற அணிந்து
எழிலுருவாய் வந்து ,
மெழுகுவர்த்தி அணைத்து,
கேக்கை வெட்டி,
பெற்றோருடன் வந்த
சிறுமி நீட்ட,
கை நீட்டிவாங்கி
வாழ்த்தி மகிழ்ந்தேன்!
உறவுகள் எனும்
வண்ணங்களற்ற
என் வாழ்வில்
இவ்வண்ணமாகவே
கொண்டாடிமகிழ்கிறேன்
பிறந்தநாள்களை
அனாதை இல்லச் சிறுமியாய்
நான்!!