இயற்கை அன்னை
வீழ்வதும் எழுவதுமாகி
சூரியனாய்
தேய்வதும் வளர்வதுமாகி
சந்திரனாய்
மறைவதும் தெரிவதுமாகி
விண்மீன்களாய்
செல்வதும் மீள்வதுமாகி
அலைகளாய்
துளிர்ப்பதும் உதிர்வதுமாகி
இலைகளாய்
மடல் விரிப்பதும் கூம்புவதுமாகி
மலர்களாய்
உலவுவதும் பொழிவதுமாகி
மேகங்களாய்
வெண்மையும் தண்மையுமாகி
அருவிகளாய்
குமுறுவதும் குளிர்வதுமாகி
எரிமலைகளாய்
ஆரப்பரிப்பதும் அடியில்அமைதியுமாகி
கடல்களாய்
நெளிவதும் ஓடுவதுமாகி
நதிகளாய்
இருளில் மலர்வதும் பரிதி கண்டு மறைவதுமாகி
புல்லில் பனித்துளிகளாய்
விண்ணில் பறப்பதும் நிலத்தில் வசிப்பதுமாகி
பறவைகளாய்
எத்தனை எழில்கோலம் கொண்டாய்
இயற்கைஅன்னையே!
அதில் இறைக்காட்சி காணவைத்தாய் ஏழை என்னையே!