கும்பகோணம் பள்ளி தீ விபத்து
இரக்கமற்ற இறைவா!
இருக்கிறாயா
இன்னும் இவ்வுலகில்?
அரக்ககுணம் கொண்ட இறைவா
அடங்கிவிட்டதா
அரும்புகளின் இரத்தத்தை குடித்த பசி.
ஏமாளி மக்கள் இருக்கும்வரை
ஏகபோகம் தான் உனக்கு.
வாரமிருமுறை
உமக்கு பால்குளியல்,
எம் குழந்தைகளுக்கோ
தீக்குளியல்.
நாளுக்கொரு பட்டாடை உமக்கு
எம் மழலைகளுக்கோ
வாழை இலையும் - ஒரு
ஓலைப்பாயும்.
நான் கொளுத்தியதோ
மணம் கமழும் பத்திதான்.
நீ கொளுத்தியதோ - என்
அரும்பு மலர்களை.
இறுகிய மனம் படைத்த இறைவா
இறங்கிவந்து பார்
வெந்துபோன - என்
கருகிய மலர்களை
தவமிருந்து பெற்றெடுத்த
தங்கக் கட்டிகளை
தட்டிப் பறித்த அலங்கோலம்
நீ செய்த மகாபாவம்.
நெருப்பில் எரித்த
குழந்தைகள் உனக்கு
நேர்த்திக் கடனாகாது.
குழந்தைகளை எரித்த நெருப்பில்
குளிர்காயும் உனக்கு
கோவில் ஒரு கேடா?