கண்ணாடி

இவன்
சொல்வதெல்லாம்
உண்மை.!
உண்மையைத் தவிர
வேறொன்றுமில்லை.!
வள்ளுவனுக்கும்
வாய்மை சொல்லித் தர
வல்லவன்.!
அரிச்சந்திரனுக்கும்
ஆசிரியன்
இவன்.!
ரசம் பூசிக் கொண்டு
ரகசியங்கள் உடைக்கும்
ரசனை மிக்கவன்.!
பிம்பங்கள்
வந்து விழும் வரை
முகம் காட்ட மாட்டான்.!
பிம்பங்கள்
விழுந்த பின்
தாமதிக்க மாட்டான்.!
சிரித்திட சிரிப்பான்
அழுதிட அழுவான்
நடித்திட நடிப்பான்
போடும் வேசத்திற்கு
பொருத்தமாய்
பொருந்துவான்.!
ஆடும் ஆட்டத்திற்கு
ஆட்டம் போடுவான்.!
ஒத்திகை
ஒப்பனை
ஓரங்கம்
எல்லாவற்றுக்கும்
இவன் அ(ர)ங்கம்.!
தன் முன்னாடி வருபவற்கே
முறையாய் பதில்
சொல்வான்.!
நமக்கு நம்மை அறிமுகம்
செய்வான்.!
இவன்
அழகென்றால் அழகு.!
அசிங்கமென்றால் அசிங்கம்.!
அன்றாடம் வீடுகளில் நடக்கும்
அழகன் அழகிப் போட்டிக்கு
இவன் தான் நீதிபதி.!