தாயை தாயாய் தாங்கு
பெற்றவள் மகிமை தன்னை
..பெருமை யுடனே நீயும்
கற்றவர் சபையில் நின்று
..கருத்துடன் வாழ்த்திப் போற்றி
குற்றமே இல்லா வகைநீ
..குடியிருந் தவள்மடி பற்றி
நற்றமிழ் மொழியால் அவள்கோர்
..நற்சான் ரிதழும் தருவாய் .
அற்புதம் அம்மா நீயே
..அவனியி லுன்போ லுண்டோ ?
பொற்பதம் தொழா தவர்க்கு
..போசனம் கிடைப்ப தில்லை
கற்பகத் தருவே தாயே
..கருணை சுரக்கு மூற்றே
வற்றிடா அன்புக் கடலே
..வாழ்க பல்லாண் டென்பாய் .
சிற்சில காலம் கடந்து
..சிந்தை மாற்றம் கொள்ள
பொற்சிலை போன்ற அழகுப்
..பதுமை ஒருத்தி வந்து
சிற்பமாய் நெஞ்சில் குந்தி
..ஜீவனை அரித்து எடுக்க
அற்பமாய் அன்னை அன்பை
..அலட்சியம் செய்வாய் நீயே!.
மறந்து போகு முன்னை
..மட்டும் நாளும் எண்ணி
மறந்தி டாமல் நீயும்
..மகிழ்வு வாழ வேண்டி
திறந்த மனதா லந்த
..தெய்வம் தன்னை வேண்டும்
சிறந்த தெய்வம் தாயே
..சிந்தனை செய்வாய் நீயே!
மனைவி வந்த போதும்
..மக்கள் பெற்ற பின்னும்
நினைப்பு கழ்ந்து போற்ற
..நண்பர் சூழ்ந்த போதும்
நினைவில் மட்டும் வைத்து
..நெகிழிந்த் திடாது தாயை
அணைத்து வாழ்ந்து பாரு
..அனைத்தும் உன்னைச் சேரும் .
வருடும் தென்றல் காற்றாய்
..வயோதிபர் மடங்கள் தாயை
வருடும் என்று நம்பி
..வயதாய் போன வேளை
குருட்டுத் தனமாய் அங்கே
..கொண்டு சேர்த்து மனதை
நெருடும் நிலையை தவிர்த்து
..நீயே தாங்கு தாயாய் !