பனிக்குடத்திலிருந்து...ஒரு குரல்.
அம்மா!
சுகம்தானே நீ!
உன்னோடு பேச...
எனக்கென ஒரு மொழி இல்லை
இந்தக் கணத்தில்.
என்றாலும்....
கை, கால் குறுக்கி...
உடல் அசைத்து...
முகம் சிணுக்கி....
உன்னோடு பேசுகிறேன்...அம்மா.
*************************************************
நான் இருக்கும்...
உன் பனிக்குடத்தில்...
என்னைச் சுற்றிலும்
ஈர நிலத்தில் விழுந்த விதையென...
வளர்ந்து கொண்டிருக்கிறது...
உன் கனவுகள்.
நீ தரும் உணவோடு...
உன் கனவுகளும்...
என் உடல் வளர்த்துக் கொண்டிருக்கிறது...அம்மா.
*************************************************************
தினம் மேடாகும்...
உன் வயிறு தொடுகிறாய் நீ...
உன்னுடைய ..."கடவுள்"...கையால்.
சிலிர்த்துத் திரும்புகிறேன்.
பெரும் சிரமங்களுக்கிடையிலும்...
நீ புன்னகைக்கிறாய்...
உண்மையான கடவுளாய்.
**************************************************************
நீ.....
நீயாக இருந்த காலங்கள்...
விலகிக் கொண்டிருக்கின்றன
உன்னிடமிருந்து.
உன்னை இழந்து...இழந்து...
நீ
கடவுளாகிக் கொண்டிருக்கிறாய்....
கல் கடவுளாவதைப் போல.
*************************************************************
நீ....
உன் இழப்புகளைச்
சேர்த்து வைத்திருக்கிறாய்...
பெரும்....கனவுகளின் தொகுப்பாய்.
ஒவ்வொன்றாய்....
எனக்குள் அனுப்புகிறாய்...
ஒரு கனவாய்...
என் உணவாய்...
உன் தொடுதலாய்...
உனக்கு மட்டும் நீ பேசிக்கொள்ளும்...
தனிப் பேச்சாய்....
நீ அறிந்த...
எல்லா வழிகளிலும்.
******************************************************
நான் இன்னமும்...
கண் திறக்கவில்லை...அம்மா.
இந்தக் கணத்தில்...
எனக்கு...இருட்டும்...வெளிச்சமும்...
வித்தியாசமில்லை.
என்றாலும்...
இந்த உலகை...
ஒரு பெரும் வெளிச்சமாய் உணர்கிறேன் அம்மா...
உனது கண்களால்.
என்னைக் குறித்தும்...
என் முகம் குறித்தும் ...
நீ வரைந்து வைத்திருக்கும்...
மன ஓவியங்கள்...
எனக்குள் விழுந்து...
என்னைத் திருத்திக் கொண்டிருக்கின்றன...
உன்னைப் பெரும் ஓவியனாக்கியபடி.
************************************************************
இப்போது...
எனக்கென்று ஒரு ...
"மணம்" வந்திருக்கிறது ...அம்மா.
உன் வாசனையும்...அப்பாவின் வாசனையும்...
கலந்ததாய் இருக்கலாம்.
என்றாலும்....
எனக்கென்று...ஒரு "மனசும்" இல்லை அம்மா...
இந்தக் கணம் வரை.
அப்பா...குறித்தும்...உறவுகள் குறித்தும்...
உன் சிணுங்கல்களை...சிரிப்புக்களை..
நான் சேர்த்து வைக்கத் துவங்குகிறேன்...
என் சின்னஞ்சிறு...மூளையில்.
**************************************************************
இப்போதெல்லாம்....
பெரிதாகிக் கொண்டிருக்கிறேன் நான்....
உன்னையும்....
நீ தரும் உணவையும்...உணர்ந்தபடி.
வெகு கவனமாகிக் கொண்டிருக்கிறாய்...
நீ...என் மீதுள்ள பெரும் அக்கறையால்...
பெரும்...பெரும்...சிரமங்களுக்கிடையிலும்.
பத்திய உணவு...
உறக்கமின்மை....
உடல் சோர்வு....இவற்றுக்கிடையில்...
அதீத ஆர்வத்துடன்...
நாட்காட்டியைப் புரட்டிப் புரட்டி...
ஒரே ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கிறாய்...
அதைக் கடந்து செல்லும்...
ஒவ்வொரு முறையும்.
***********************************************************
இப்போதெல்லாம்...
எனக்கான பெயர் தேடி...
சலிக்கத் துவங்கி விட்டாய் நீ...
எல்லோரிடமும் அது குறித்து விவாதிக்கிறாய்...
என்னைப் பற்றிய பெரும் கனவுகளையும் கூட....
நீளும் எதிர்பார்ப்புகளுடன் நீ அலசுகிறாய்...
எல்லோரிடமும்.
திகைப்பும்....வியப்புமாய்...
உன்னைக் கிரஹிக்கத் துவங்குகிறேன் நான்...
உன் பனிக் குடத்தில் அசைந்தபடி.
************************************************************
எல்லாம்...கடந்து....
ஒரு நாளில்...
நான்....
உன் வயிறு திறந்து வருகிறேன்...
பூமி திறந்து வரும் ஒரு செடியாய்....
உன் நிணத்திலும்....இரத்தத்திலும்...
குளித்தபடி.
இன்னுமொரு பிறப்பாய்....
உயிர் சிதைந்து....உயிர் பெறுகிறாய்..நீ.
என்றாலும்....
உன் உயிர் வலியின் உறுத்தல்கள் இன்றி...
பெரும் கருணையும்....
பேரன்பும்...
புன்னகையும்....
பிரவாகிக்க...
மயங்குகிறாய்...நீ.
*******************************************************
அந்தக் கணத்தில்...
அழத் துவங்குகிறேன் நான்....
************************************************************