வரலாமே என்னோடு .....

என் பாத அடிகள்
என்னைக் கேட்டுத்தான்
பயணிக்கும் எங்கேனும்
பகுத்தறிவோடுதான் நான்
சாலைப் பரப்பில்
என் தனிமைகள் மட்டும்
துணையாக்கிக் கொண்டு
நெடுந்தூரம் செல்ல விருப்பம்
போகும்வழியில்
என் முதுகில் சுமக்க
மனிதத் தன்மைகளை
பையில் நிரப்பிக் கொண்டேன்
கரைகள் காண
கணநேரத்தில் பாய்ந்தோடி
அஸ்தியான அனுபவங்களை
ஆற்றுநீரில் கரைத்துவிட்டேன்
உயிரோடு
கலந்தாய்வு முடித்து
அன்பை ஆயுளாக்கிவிட
ஒப்பந்தம் செய்துகொண்டேன்
அறிவுக்களஞ்சியம்
ஆற்றல்களின் பிறப்பிடம்
எனது மூளை - கழட்டிக்
கைப்பிடிக்குள் ஆயுதமாக்கினேன்
இருகண்களும்
பிரபஞ்சம் உளவுபார்க்க
பிரிந்தே தான் செயல்படும்
பின்வாங்குதல் என்றுமில்லை
சூழ்நிலைகள்
சுதந்திரம் வாங்க தருணம்
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
எட்டுதிசையாலும் எனதாட்சியில்
ரசிக்கிறேன்
தனியாகவே சிரிக்கிறேன்
தத்துவநெறிகள் எல்லாமும்
எனக்கு நகைச்சுவை உணர்வுகள்
வாருங்கள்
என்னோடு பங்குபெற
புது உலகு புகுவிழாவிற்கு
பூலோகத்தின் இறுதியில் நான்