என்னைப் பற்றி…… பகுதி 12
நான் எழுத்துலக ரசிகை.
நான் சந்தித்தது சில பேர்களை
பயணித்தது இந்த ப்ரபஞ்சத்தில்
உணர்ந்தது
இதில்
பல சூர்ய குடும்பங்கள்
என்பதை!
அழைக்கப்பட்டேன்
பூமிக்கு
என் சொந்தங்களால்,
---- தொடர்பு கோளாறால்…..
சொல்லத் தொடங்கியது--
எனது தமிழ் பண்பினை பற்றி…
சொன்னது
என் தோழியின்
தமிழ் திருமணத்தில்
ஒரு வாழ்த்துரையை!
இனி தொடர்கிறேன்…..
என்
தமிழ் பண்பை
பற்றி
சில வரிகள்!
செவ்வாய் கடந்து
வெள்ளி வந்தாலும்
ஞாயிறு தொழும்
என் பண்பு என்றும் மாறாது!
படைத்தவர் குள்ளமானாலும்
பண்பால் உயர்ந்தவள் நான்!
வள்ளுவன் என் இறைகவி!
(பாரி, ஓரி, காரி, என)
வள்ளல்கள் பல கண்ட
ஔவை என் மூதாட்டி!
ஆதியில் தொடங்கிய
அகத்தியர்,
இலக்கணம் தந்த
தொல்காப்பியர்,
இவர்கள் வரிசையில்
ஈகை உணர்த்தும் கவிகளால்
ஏடுகள் சேர்த்தோர்
ஏராளம்!
கம்பன், இளங்கோ தொடங்கி
கவிப்பேரரசு வரை
காதலை வளர்த்து
காவியம் படைத்தே
மேவியோர் பலர்!
கல்லூரி நாட்களில்
நான் படித்த பாடம்-
சொந்தத்தில் தவறு –
திருமணம் !
குருதி வகைபிரித்து
பொருத்தம் பார்-
எனும் புதிய ஆத்திச்சூடி
என் மனதில் ஆழ்மாய்!
அதனால்
நான் காதலித்தது
கல்லூரி நாட்களில்
ஓர்
அந்நிய மதத்து அன்பனை!
எனக்கு வந்தது
அகவைக் கவர்ச்சியாம்!
தள்ளுபடி செய்தனர்
விழாக்கால
துணி விலைபோல்
என் காதலையும்
என் உற்றார்-உறவினர்!
நெற்றிக் கண் திறந்தனர்
என் காதல் மேல்!
எரித்தனர்
அவன் குடும்பத்தையும்
அவர்தம் வீட்டையும்!
அழுதேன், புலம்பினேன்….
மனவலிகளுடன்
நடைபிணமாய்
நான் இன்று
ஏன் இந்த கொலைவெறி?
யாரும் சொல்வீர்களா..... ?
என் காதல் தவறானதா…… ?!
என் பெயர் மங்காத்தா…………