புரிந்தவர்க்கு மட்டுமே இது புரியும்.
என்னதான் சொல்லுங்கள் என்னால் அவளை
மறக்க முடியாது மறுக்க முடியாது
சின்னதாய் வேண்டாமென சொல்லி விட
சீனிமிட்டாயா அவள் சொல்லுங்கள்.
அவளது அந்த அற்புதப் பேச்சு
அசைந்து அளவாய் அதிரும் அதரம்
ஒலியது கேட்கின் வலியது எடுக்கும்
ஒலியல்ல பெண்மையின் உணர்வு.
அவளது அறிவின் ஆயிரம் தன்மை
ஆன்மா போர்த்திய பஞ்சின் மென்மை
கவளமாய் என்னைக் கவ்விப் பிடிக்கும்
கண்ணால் அவள் ஊட்டுஞ் சோறு.
பவளமும் பட்டும் பயந்து ஒளியும்
பாவையின் பரவச அதரம் உதிர்க்கும்
முத்துச் சிரிப்பின் முகத்தைக் கண்டு
கத்துங் கடலும் கால் வலிக்க நிற்கும்.
சொத்துக்கள் வேண்டாம் சுகமும் வேண்டாம்
மொத்தமாய் அவள் மட்டும் வேண்டும்
சித்ததின் உள்ளே சிரித்து நிற்பதால்
பித்தனாய் நான் இன்று அலைகின்றேன்.
மனிதரில் அவளுக்கு இணையும் உண்டோ
இனி இந்தக் கேள்விதான் மிஞ்சும்
புனிதையோ பூவுலக அரசியோ அவளல்ல
புரிந்தவர்க்கு மட்டுமே இது புரியும்.