செல்லாக்காசு
ஆசையாய் பெண்பார்த்து
சடங்குகள் பலசெய்து
சான்றோர்கள் கண்பார்த்து
தன்மகனுக்கு மணம்முடித்தாள்
மருமகளை மகளாக்கி
மகிழ்ச்சியை உரித்தாக்கி
பெருமையை தனதாக்கி
நாட்களை கழித்தாள்
சின்னதாய் கருத்துவேறுபாடும்
மெல்லிதாய் மனவேறுபாடும்
தோன்றின வாய்தர்க்கங்கள்
மாமியாருக்கும் மருமகளுக்கும்
மருமகள் உடைத்தால்
ஆயிற்று மண்குடம்
மாமியார் உடைத்தால்
ஆயிற்று பொன்குடம்
உண்டாயிற்று ஆங்கோர்
அழகிய வாரிசு
பேரப்பிள்ளையின் புன்னைகையில்
மெய்மறந்தாள் பேரிளம்பெண்
வாரிசு வரும்வரையில்
பதுங்கியிருந்த சச்சரவு
பாய்ந்தது புலியாய்
மனதில் வலியாய்
பெற்றவள் ஒருபக்கம்
உடையவள் மறுபக்கம்
மத்தளமாய் இருபக்கம்
தவித்தான் தலைவன்
இளமையின் பிடிவாதம்
பணிந்தது முதுமை
முதுமையின் விவாதம்
வெறுத்தது இளமை
இளமை தனிமைதேடி
முதுமையை தனிமையாக்கி
தனிமை கொடுமையாகி
போனாள் செல்லாக்காசாகி
முதுமையை முடக்கிய இளமை
கொண்டது மிக அறியாமை
புரியும் ஒருநாள் நன்று
செல்லாக்காசாகி போகும் அன்று